என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
மத்திய அரசின் வேளாண் அடுக்கு திட்டத்தில் நில உடமை பயன்பாடு உறுதி செய்வதில் சிக்கல்
- விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான அடங்கல் உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க வேண்டும்.
- விவசாய நிலங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் கை மாறியுள்ளன.
திருப்பூர் :
மத்திய அரசின் வேளாண் அடுக்கு திட்டத்தில் நில உடமை பயன்பாடு உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்மை துறையினர் கூறியதாவது :- வேளாண் அடுக்கில் விவசாயிகள் இணைக்கப்படுவதன் மூலம் விவசாய நில பயன்பாடு குறித்த தெளிவான தகவலை பெற முடியும்.இத்திட்டத்தில் இணைய விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான அடங்கல் உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க வேண்டும். பல இடங்களில் விவசாய நிலங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் கை மாறியுள்ளன. அவர்கள் அந்த நிலங்களை விற்கக்கூடும்.அத்தகைய நிலம் குறித்த விவரங்களை பதிவு செய்ய தயங்குகின்றனர்.பல இடங்களில் கூட்டுப்பட்டாவில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் பல இடங்களில் குடும்பத்தகராறு நிலவுகிறது.
அவர்களுக்கான நில பயன்பாடு விவகாரம் நீதிமன்ற வழக்கிலும் உள்ளன. அத்தகைய நிலத்துக்கு யார் உரிமையாளர் என்பது உறுதியாகாத நிலையில் வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் கொண்டு வருவதில் சட்ட சிக்கல் உள்ளது.ஒரு ஊரில் நிலம் வாங்கியுள்ள பலர் வெளியூர்களில் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் நிலம் பராமரிக்கும் பொறுப்பை வேறு சிலரிடம் ஒப்படைத்து விடுகின்றனர். அவர்களது நிலங்களை ஆவணப்படுத்துவதும் சிரமமான காரியமாக உள்ளது.நில வரையறை தொடர்பான அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை வருவாய்த்துறையினர் தான் வழங்க வேண்டும் என்ற நிலையில் பெரும்பாலான இடங்களில் சில விவசாய நில உரிமையாளர்கள் அருகேயுள்ள வருவாய்த்துறை, ஓடை புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ளனர்.தங்கள் நில விவரங்களை ஆவணப்படுத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் கைநழுவி போகும் என்ற அச்சத்தால் பலரும் இத்திட்டத்திற்குள் இணைய தயக்கம் காட்டுகின்றனர்.
வேளாண் அடுக்கு திட்டம் வெற்றிகரமாக செயல்பட வருவாய்த்துறையினரின் பங்களிப்பு முக்கியம் என்ற நிலையில் திட்டம் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






