search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் சேகரிக்கப்படும்  கழிவுகள் மூலம் உரம்-பயோ கியாஸ் உற்பத்தி செய்ய திட்டம்
    X

    கோப்புபடம். 

    திருப்பூரில் சேகரிக்கப்படும் கழிவுகள் மூலம் உரம்-பயோ கியாஸ் உற்பத்தி செய்ய திட்டம்

    • மாவட்டத்தை சேர்ந்த உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
    • மக்காத குப்பையை தனியே சேகரித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் 500 மெட்ரிக் டன் அளவு குப்பை கழிவுகள் சேகரமாகிறது. மாநகராட்சி பகுதியில் 16 இடங்களில் காய்கறி கழிவுகள் மூலம் நுண் உரம் உற்பத்தி செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    காய்கறி கழிவு உள்ளிட்ட மக்கும் கழிவுகளை மாற்று சக்தியாக மாற்றி பயன்படுத்த 12 ஆண்டுக்கு முன் தென்னம்பாளையம் சந்தை வளாகத்தில் காய்கறி கழிவுகளை கொண்டு மின் உற்பத்தி செய்யும் வகையில் திட்டம் துவங்கியது. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அது வெற்றி பெறுவதில் சிக்கல் இருந்த நிலையில், கைவிடப்பட்டது.

    இதனால் பயோ- கியாஸ் உற்பத்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக 1.60 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்றது.மேலும் சில மாறுதல்கள் செய்து, இங்கு உற்பத்தியாகும் பயோ கியாசை சிலிண்டர்களில் நிரப்பி, அம்மா உணவகம் மற்றும் மாநகராட்சி சத்துணவு மையங்களில் பயன்படுத்த முடிவானது. ஆனாலும் மையம் முழுமையாக இயக்கப்படாமல் வீணானது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் சத்தமின்றி விலகியது.

    இவ்வாறு பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இம்மையம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறுகையில், நவீன தொழில்நுட்பத்தில் புதிய கருவிகள் பொருத்தி சி.என்.ஜி., கியாஸ் உற்பத்தி துவங்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட அளவிலான வாகனங்கள் இந்த கியாஸ் மூலம் இயக்கப்படும். இதனால் கிடப்பில் உள்ள மையம் செயல்படுவதோடு கணிசமான அளவு வாகன எரிபொருள் மீதமாகும் என்றார்.

    தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பசுமை ஆலயம் திட்டம் தயாரித்துள்ளது. கோவில்களில் சேகரமாகும் மக்கும் குப்பையை உரமாக்கி நந்தவனங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கோவில்களில் உள்ள கோசாலை மாடுகளின் கழிவுகள், அன்னதான கூட கழிவு, பூமாலை, துளசி, தோட்ட கழிவு, காய்கறி மற்றும் கால்நடை கழிவுகளை கொண்டு, மக்கும் உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பையை தனியே சேகரித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் பசுமை ஆலயம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இணை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இணை கமிஷனர் குமாரதுரை தலைமை வகித்தார். மாவட்டத்தை சேர்ந்த உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

    ஐ.டி.சி., நிறுவனம், ஆர்.டி.ஓ., டிரஸ்ட், எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் நிறுவனத்தினர் பங்கேற்று பசுமை ஆலய திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினர். திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில், பசுமை ஆலயம் திட்டம் செயல்படுத்தப்படுமென இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×