search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுத்தை நடமாட்டம் - ஊதியூரில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு
    X

    கோப்புபடம்.

    சிறுத்தை நடமாட்டம் - ஊதியூரில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு

    • பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு மற்றும்கன்றுக்குட்டிகளை கடித்து கொன்று போட்டு விடுகிறது.
    • சிறுத்தையை பிடிக்க மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே ஊதியூர் மலை 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த மலையில் மான், நரி, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ள சிறுத்தை ஒன்று, மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு மற்றும்கன்றுக்குட்டிகளை கடித்து கொன்று போட்டு விடுகிறது.

    இதனால் ஊதியூர் மலை பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இதனால் சிறுத்தையை பிடிக்க மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டுக்குள் ஆடுகள் கட்டி வைத்துள்ளனர். மேலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தி இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சிறுத்தை உருவம் பதிவு ஆகவில்லை. இதனால் கூண்டுகள் வைக்கப்பட்ட இடத்திற்கு சிறுத்தை வரவில்லை என தெரிகிறது.

    வனப்பகுதிக்குள் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கண்காணிக்க டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த முயற்சியிலும் சிறுத்தை தென்படவில்லை. இருப்பினும் பல்வேறு குழுக்களாக பிரிந்து பாதுகாப்புடன் வனப்பகுதி மற்றும் மலையடிவாரம் என அனைத்து இடங்களிலும் சிறுத்தையை தேடி வருகின்றனர்.

    இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது " மலைப்பகுதியில் சிறுத்தை எங்கு பதுங்கி உள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கேமராவிலும் பதிவாகவில்லை. டிரோன் கேமராவிலும் சிக்கவில்லை. கூண்டுக்குள்ளும் மாட்டவில்லை. ஒருவேளை சிறுத்தை இடம் பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்று விட்டதா? என்ற சந்தேகமும் உள்ளது. இருப்பினும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறோம். எனவே பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்" என்றார்.

    Next Story
    ×