search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக திருப்பூரில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதியான ஆடைகள்
    X

    கோப்புபடம்.

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக திருப்பூரில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதியான ஆடைகள்

    • பிபா விளையாட்டுக்காக விளையாட்டு சார்ந்த உடைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
    • திருப்பூரில் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    திருப்பூர் :

    கத்தார் நாட்டில் பிபா உலகக்கோப்பை- 2022 தொடர் கடந்த 20ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் 8 வெவ்வேறு பிரிவுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. வளைகுடா நாடுகளில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெறுவது இதுவே முதல்முறை.

    இதன்மூலம் கத்தார் நாட்டின் வர்த்தகம், சுற்றுலா, பொருளாதாரம் எனப் பல்வேறு விஷயங்கள் வளர்ச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், பிபா உலகக்கோப்பை போட்டிக்காக கத்தாருக்கு விளையாட்டு சார் உடைகளை ஏற்றுமதி செய்து திருப்பூர் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த சாயமிடுதல், பிரின்டிங்க், எம்ராய்டரி, நூல் மில்கள் உள்ளிட்ட உப தொழில்கள்,ஜாப் ஒர்க் நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    மேலும் தொழிலாளர் கள் சார்ந்து ஏராளமானோர் மறைமுக வேலை யினையும் பலர் பெற்று வருகின்றனர். திருப்பூரில் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 35 ஆயிரம் கோடி அளவுக்கு அந்நிய செலாவணி ஈட்டித்தரும் நகராக திருப்பூர் உள்ளது.

    ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலில் சர்வதேச அளவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள திருப்பூரில் இருந்து பிபா விளையாட்டுக்காக விளையாட்டு சார்ந்த உடைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் கொச்சின் விமான நிலையம் வாயிலாக கத்தார் தலைநகர் தோஹாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட விளையாட்டு சார்ந்த உடைகள் சுமார் 17 சரக்கு தொகுப்புகள் கொச்சி விமான நிலையம் வாயிலாக கத்தாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருப்பூரை சேர்ந்த ஜவுளி நிறுவனங்கள் நல்ல வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிகிறது.

    இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் வாயிலாக ஆர்டர்களை பெற்று ஏற்றுமதி வழி வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை கைப்பற்றுவதற்கு அரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே திருப்பூர் ஜவுளித் துறையினரின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×