search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 1,675 பேருக்கு ரூ.34 லட்சம் பரிசு - அமைச்சர் வழங்கி பாராட்டினார்
    X

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டிய போது எடுத்த படம். செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் அருகில் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 1,675 பேருக்கு ரூ.34 லட்சம் பரிசு - அமைச்சர் வழங்கி பாராட்டினார்

    • 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
    • 13 விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. தடகளம், குழு விளையாட்டு போட்டிகளான கபடி, சிலம்பம், இறகுபந்து, கையுந்துபந்து, கூடைப்பந்து, ஆக்கி, மேஜைப்பந்து, நீச்சல் என 13 விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்டன.

    இந்த போட்டிகளில் மொத்தம் ஆண்கள் 10 ஆயிரத்து 359 பேரும், பெண்கள் 4 ஆயிரத்து 596 பேரும் என மொத்தம் 14 ஆயிரத்து 955 பேர் பங்கேற்றனர். முதல்பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது. மாவட்டத்தில் ரூ.34 லட்சத்து ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மொத்தம் 1,675 பேருக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    விழாவில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கோவை மண்டல முதுநிலை மேலாளர் சுஜாதா, மாவட்ட விளையாட்டு அதிகாரி ராகோபால், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×