search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே கண்டெய்னர் லாரிகளில் இருந்து பனியன்கள் திருடிய 3 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

    பல்லடம் அருகே கண்டெய்னர் லாரிகளில் இருந்து பனியன்கள் திருடிய 3 பேர் கைது

    • சொந்தமான சரக்கு வேன்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது.
    • விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கும் பனியன்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆயிரம் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அட்டைப் பெட்டிகளில் பன்டல் செய்யப்பட்டு, அமெரிக்கா அனுப்பப்படுவதற்காக, அருள்புரத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான சரக்கு வேன்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து கப்பல் மூலம் அமெரிக்கா அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அனுப்பப்பட்ட பண்டல்களில் 1,300 பனியன்கள் குறைவாக இருப்பதாக அமெரிக்க நிறுவனம் தனியார் பனியன் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியது. இதுகுறித்து பனியன் நிறுவனத்தினர் ஆய்வு செய்தபோது சரக்கு வேனில் இருந்து பனியன்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பனியன் நிறுவன மேலாளர் சதீஷ் என்பவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காரணம் பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே பனியன் நிறுவனத்தில் சரக்குகளை ஏற்றிச் சென்ற வேன் ஏஜென்ட் சிவா என்பவர் அந்த வழியே வந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அவரை போலீசார் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் பனியன்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இது குறித்த விசாரணையில் அவர் கூறியதாவது:-

    வால்பாறையைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சிவா(32) திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த காத்தான் மகன் சிவக்கண்ணன்(36) அதே பகுதியைச் சேர்ந்த பூமி பாலன் மகன் ஜெயபால்(34) ஆகிய மூவரும் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான சரக்கு வேன்களில் பனியன் அட்டைப் பெட்டிகளை கொண்டு சென்றனர்.

    அப்போது அருள்புரத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகம் செல்லும் வழியில் அட்டைப்பெட்டிகளில் இருந்து 1,300 பனியன்களை திருடியதும், அவற்றை வெளி வியாபாரிடம் விற்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.1.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×