search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பகுதியில் 2 குழந்தை தொழிலாளர், 4 வளரிளம் பருவத்தினர் மீட்பு -   தொழிலாளர்துறை நடவடிக்கை
    X

    கோப்புபடம்.

    பல்லடம் பகுதியில் 2 குழந்தை தொழிலாளர், 4 வளரிளம் பருவத்தினர் மீட்பு - தொழிலாளர்துறை நடவடிக்கை

    • திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
    • 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர்.

    திருப்பூர் :

    சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.

    இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் மற்றும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களாக 2 சிறுவர்கள், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் அமர்த்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயகரமில்லாத தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு மொத்த வேலை நேரம் 6 மணி நேரமாகும். 3 மணி நேரம் கழித்து 1 மணி நேரம் ஓய்வு இடைவேளை விட வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

    எந்தவொரு நிறுவனமும் மற்றும் தொழிற்சாலைகளிலும் வளரிளம் பருவத்தினரை இரவு நேரங்களில் பணியமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் தொடர்புடைய தொழிலாளர் துறை, தொழிற்சாலை துறைக்கு அறிவிப்புபடிவம் அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் சட்டப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

    இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×