search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் திட்ட தொழிலாளர்களை விவசாய தொழிலில் ஈடுபடுத்தும் அறிவிப்பை  பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் - விவசாயிகள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம்.

    100 நாள் திட்ட தொழிலாளர்களை விவசாய தொழிலில் ஈடுபடுத்தும் அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் - விவசாயிகள் எதிர்பார்ப்பு

    • தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது
    • தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் தவிர்த்து அவிநாசி, பல்லடம், பொங்கலூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத் தொழில் தான் பிரதானம்.தென்னை, வாழை, கரும்பு, பருத்தி, சோளம், நிலக்கடலை என அந்தந்த பகுதியின் மண், மழை வளத்துக்கேற்ப பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    சமீப ஆண்டுகளாக விவசாய நிலங்களில் உழவு செய்வது, களை எடுப்பது, உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, விளைபொரு ட்களை அறுவடை செய்வது, சந்தைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விவசாய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதற்கு 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் தான் முக்கிய காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். கிராமங்களில் கல், மண் வரப்பு, தென்னை மரங்களை சுற்றி அகழி எடுப்பது, உரக்குழி அமைப்பது, குளம், குட்டையோரம் மரக்கன்று நடுவது, சாலையோரம் உள்ள புதர் செடிகளை வெட்டுவது, நர்சரி பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கூடுதலாக 50 நாள் வேலை நாள் உயர்த்தப்படும் என சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கூறுகையில், 100 நாள் திட்டத்தில், ஊராட்சிகளில் வேலை அதிகமுள்ள சமயங்களில் தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர் என்றனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், 100 நாள் திட்டத்தில் பல இடங்களில் பணிகள் முறைப்படி நடப்பதில்லை.100 நாள் வேலை உறுதியளிப்பு திட் டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணி, சாலை அமைத்தல் போன்ற கடினமான பணிகள், தனியாருக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டு, உடல் உழைப்பு தொழிலாளர்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

    ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 நாள் திட்ட தொழிலாளர்களின் பெயரில் வழங்கப்படுகிறது. விவசாய தொழிலாளர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் 100 நாள் திட்டம் தான். எனவே 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய தொழிலில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.

    அரசு வழங்கும் சம்பளத்துக்கு நிகரான சம்பளம் வழங்க விவசாயிகளும் தயாராக உள்ளனர். இதன் மூலம், தொழிலாளர்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். விவசாயமும் செழிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×