search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அட்சயபுரீஸ்வரர் கோவிலில் சிலைகள் திருட்டு
    X

    திருட்டு நடந்த அட்சயபுரீஸ்வரர் கோயில்.

    அட்சயபுரீஸ்வரர் கோவிலில் சிலைகள் திருட்டு

    • அஸ்திரதேவர், சிவகாமி அம்மன், பிரதோஷ நாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர்.
    • சிலைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே விளங்குளம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அட்சயபுரீ ஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவில், கி.பி.13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் இக்கோவிலில் வழிபட்டதாகவும் கல்வெட்டு உள்ளன. உடலில் ஏற்பட்ட ஊனம் இக்கோவிலில் நிவர்த்தி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இங்கு சனி பகவான் திருமண கோலத்தில் காட்சி தருகிறார். பூச நட்சத்திர பரிகார தலமாகமாகவும் விளங்கிறது.அட்சய திருதியை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இக்கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகள் வைக்க உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில், திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளது. திருவாரூரில் இருந்து சிலைகளை எடுத்து வந்து திருவிழா செய்வதற்கு சிரமமாக இருப்பதாக கருதிய கிராம மக்கள், அதற்கு பதிலாக கடந்த 2011ம் ஆண்டு கிராமத்தினர் ஐம்பொன் சிலைகளின் மாதிரியை கொண்டு சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட அஸ்திரதேவர், சிவகாமி அம்மன், பிரதோஷ நாயகர் சிலைகளை செய்து வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 13ம் தேதி நடந்த திருவிழா இரவு பூஜை முடிந்து அர்ச்சகர் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலை நடராஜர் சன்னதி பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து அர்ச்சகர் அளித்த தகவலின் பேரில், கிராமத்தினர் கோவிலுக்கு வந்த போது கோவிலில் இருந்த பித்தளையான அஸ்திரதேவர், சிவகாமி அம்மன், பிரதோஷ நாயகர் சிலைகள் திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்து கோவில் செயலர் அலுவலர் தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் நேற்று கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது 4 நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 20 கிலோ எடையும், சுமார் 60 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×