search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன்னிகோனேந்தல் வருவாய் குறு வட்டத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்- கலெக்டரிடம் விவசாயிகள் மனு
    X

    பொதுமக்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்ட கலெக்டர் அலுவலக வளாகம்.

    வன்னிகோனேந்தல் வருவாய் குறு வட்டத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்- கலெக்டரிடம் விவசாயிகள் மனு

    • வறட்சியான காலங்களிலும், மகசூல் விளைச்சல் இல்லாத காலங்களிலும் எங்கள் பகுதி வறட்சி பகுதியாக அறிவிக்கப்படவில்லை.
    • வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் வன்னிகோனேந்தல் வருவாய் குறுவட்ட விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சுமார் 9 ஊராட்சிகள் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் வரை ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தது. அப்போது இந்த ஊராட்சிகள் மேலநீலிதநல்லூர் யூனியனுக்கு உட்பட்டு இருந்தது. இந்த பகுதி எப்போதுமே வானம் பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது.

    அந்த நேரத்தில் எங்களுக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.

    ஆனால் 2019-க்கு பிறகு மானூர் யூனியனுடன் எங்கள் பகுதி இணைக்கப்பட்டதால் கடுமையான வறட்சியான காலங்களிலும், மகசூல் விளைச்சல் இல்லாத காலங்களிலும் வறட்சி பகுதியாக எங்கள் பகுதி அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக எங்களுக்கு வறட்சி நிவாரணமோ, பயிர் காப்பீடு தொகையோ வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளோம்.

    தற்போது தமிழக அரசால் 25 வட்டாரங்கள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 9 ஊராட்சிகளையும் வறட்சி பகுதியாக அறிவித்து வறட்சி நிவாரணமும், பயிர் காப்பீடும் வழங்க கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 9 கிராமங்களிலும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவார்கள். ஆனால் இன்று மிக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×