search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலத்தில் இருந்து  பழைய குற்றாலம் - மத்தளம்பாறை வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
    X

    குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் - மத்தளம்பாறை வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

    • நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் பழைய குற்றாலம் - மத்தளம்பாறை சாலையை கடந்து செல்கிறது.
    • சாலை இப்போது மிகவும் குறுகலாகவும் குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் - மத்தளம்பாறை சாலை சுமார் 5 கிலோ மீட்டர் நீளம் உள்ளது.

    இந்த சாலை மிகவும் குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது. கடந்த காலங்களில் விசாலமாக இருந்த சாலையை இருபுறமும் உள்ள நில உரிமையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இன்றைக்கு சாலை மிகவும் குறுகலாக ஒரு வாகனம் மட்டுமே செல்லும் நிலையில் உள்ளது.

    இந்த சாலையில் ஆண்டு தோறும் சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் பயன்படுத்துகிற முக்கியமான சாலையாக உள்ளது. நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கிறது.

    மேலும் கடையம் - அம்பாசமுத்திரம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தென்காசி நகருக்குள் சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மத்தளம்பாறை, பழைய குற்றாலம், குற்றாலம் சாலையை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த சாலையில் 24 மணி நேரமும் வாகனங்கள் அணிவகுத்து வருவதை காண முடிகிறது.

    இப்போது கடந்த சில மாதங்களாக அண்டை மாநிலமான கேரளாவிற்கு 16 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்கள் தென்காசி - நெல்லை மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் இருந்து குண்டு கற்கள், ஜல்லிகற்கள், எம்.சாண்ட் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக ஏற்றிக் கொண்டு இந்த சாலை வழியாகவே கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள்.

    தூத்துக்குடி துறை முகத்தில் இறக்குமதியாகும் மரத்தடிகளை ஏற்றி வரும் கனரக லாரிகளில் இந்த சாலை வழியாகவே பிரானூர் பார்டர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகமாக பயன்படுத்தி வரும் முக்கியமான சாலையாக இருந்து வரும் இந்த சாலை இப்போது மிகவும் குறுகலாகவும் குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது. மேலும் 50, 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் இந்த சாலையில் குற்றாலம் முதல் மத்தளம்பாறை வரை இருபுறமும் அதிக அளவில் நெருக்கமாக இருந்து வருகிறது.

    சாலை ஓரங்களில் இருந்து வரும் பழமையான மரங்களில் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்துக்கு உள்ளாகி தொடர்ந்து உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பழமையான மரங்களின் கிளைகள் சாலை முழுவதும் படர்ந்து இருப்பதால் கனரக உயர்ந்த கண்டெய்னர் வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு மரக் கிளைகளுக்கு பயந்து கண்டெய்னர் வாகன ஓட்டிகள் வாகனங்களை வேகமாக திருப்பும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    மரக்கிளைகள் எதிரில் வரும் வாகனங்களை மறைப்பதாலும் விபத்துகள் ஏற்படுகிறது. இந்தச் சாலையில் குற்றாலம் முதல் மத்தளம்பாறை வரை இரவு நேரங்களில் தெருவிளக்கு களும் இல்லை.

    மேலும் இந்தச் சாலையில் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என். ரவி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது வேகத்தடைகளை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகு அந்த வேகத்த டையை அமைத்துக் கொடுக்க நெடுஞ்சாலைத்துறை இதுவரை முன்வரவில்லை.

    எனவே குற்றாலம் - புலியருவி - பழைய குற்றாலம் - மத்தளம்பாறை வரை உள்ள சாலையை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு பழமையான மரங்களை அப்புறப்படுத்தி விட்டு, சாலையை அகலப்படுத்தி, தரமான தார் சாலை அமைப்பதோடு, தேவையான இடங்களில் வேகத்தடையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×