search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்முதல் நிலையங்களில் குவிக்கப்பட்ட நெல்மணிகளை மழைநீர் சூழ்ந்தது
    X

    கோவில்பத்து சிவன் கோவில் மற்றும் பூதலூர் பகுதி கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.

    கொள்முதல் நிலையங்களில் குவிக்கப்பட்ட நெல்மணிகளை மழைநீர் சூழ்ந்தது

    • கோவில்பத்து சிவன் கோவில் பிரகார பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    • மழையால் தண்ணீர் தேங்கி இருப்பதால் அறுவடை எந்திரங்களை வயல்களில் இறக்க இயலாத நிலையை உருவாக்கி உள்ளது.

    பூதலூர்:

    பூதலூர், திருக்காட்டு ப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 12 மணி முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது.

    பெருமழையால் சாலைகளில் வெள்ள மென தண்ணீர் திரண்டு ஓடியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதியில் பகல் நேரங்களில் கோடை வெயிலை போல வெயில் கொளுத்தியது.

    இதனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல நிலைமையில் அறுவடை செய்து நெல்லை விற்பனை செய்து விடலாம் என்றுஎண்ணியிருந்தனர்.

    இந்த பகுதியில் சில இடங்களில் குறுவை அறுவடை எந்திரங்கள் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.அறுவடை செய்யப்பட்ட நெல்லை வழக்கம்போல கிடைக்கும் இடத்தில் எல்லாம் காய வைக்கும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர்.

    குறிப்பாக பூதலூர் மேம்பால பகுதியில் முழுவதும் விவசாயிகள் தங்கள் நெல்லை கொட்டி காய வைத்திருந்தனர்.

    நேற்று மாலை நெல்லை குவித்து மூடி வைத்திருந்தனர்.

    அதேபோல நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்பதை எதிர்பார்த்து கோவில்பத்து பூதலூர் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லை குவித்து மூடி வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் மூடி வைக்கப்பட்டிருந்த நெல் குவியல்களை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் இன்று கொள்முதல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    கல்லணையில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. பூதலூர் அருகே உள்ள கோயில்பத்து சிவன் கோவில் பிரகாரப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    அதேபோல பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்களை இந்த மழையால் தண்ணீர் தேங்கி இருப்பதால் அறுவடை எந்திரங்களை வயல்களில் இறக்க இயலாத நிலையை உருவாக்கி உள்ளது. மழை தொடர்ந்தால் குறுவை அறுவடை பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்.

    தற்போது அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கும் நெல்லை ஈரப்பதம் பார்க்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×