என் மலர்
உள்ளூர் செய்திகள்

மா. சுப்பிரமணியன்
708 நகர்புற சுகாதார மையங்களை காணொலி காட்சி மூலம் நாளை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்- வள்ளியூரில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
- பெட் சிட்டி ஸ்கேன் தென் மாவட்டங்களில் மதுரையில் மட்டும் தான் உள்ளது.
- நெல்லை மாநகராட்சி பகுதியில் 10 கட்டிடங்கள் நாளை திறந்து வைக்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.1.53 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழழ வள்ளியூரில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி பேசினார். சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்சிங் பேடி, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று மாலை நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள புற்றுநோய் சிகிச்சை கண்டறியும் அதிநவீன ஸ்கேன் கருவியை செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்க உள்ளேன். பெட் சிட்டி ஸ்கேன் என்று அழைக்கப்படும் இந்த ஸ்கேன் முறையானது தென் மாவட்டங்களில் மதுரையில் மட்டும் தான் உள்ளது. இதனால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.
இதையடுத்து இந்த மாவட்டங்களின் பொதுமக்கள் நலன் கருதி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ரூ. 12 கோடியில் இந்த புதிய பரிசோதனை கருவி அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர மருத்துவமனை வளாகத்தில் ரூ. 23.75 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தொடங்கி வைக்க உள்ளேன்.
மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 708 நகர்புற சுகாதார மையங்களை காணொலி காட்சி வாயிலாக புதிய முறையில் தொடங்கி வைக்க உள்ளார். அதில் நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள 22 கட்டிடங்களில் 10 கட்டிடங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதால் அவை நாளை திறந்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






