search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் ஜவுளித்துறை இரண்டாவது இடம் வகிக்கிறது- மத்திய மந்திரி பியூஷ் கோயல்
    X

    மத்திய மந்திரி பியூஸ் கோயல்

    கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் ஜவுளித்துறை இரண்டாவது இடம் வகிக்கிறது- மத்திய மந்திரி பியூஷ் கோயல்

    • குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வெற்றிக்கு கோவை மாநகரம், சிறந்த உதாரணம்.
    • குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா (SIMA) சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் சைமா ஜவுளி கண்காட்சி 2022-ஐ மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டு மலரை வெளியிட்டு அவர் பேசியதாவது:

    கோவை மாநகரம் ஜவுளி உற்பத்திக்கு மட்டுமின்றி, நூற்பாலை எந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த உபபொருட்கள் உற்பத்தியில் நாட்டின் முன்னணி தொழில் மையமாக திகழ்கிறது. உலகளவிலும், ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்ற இடமாக கோவை திகழ்கிறது. இப்பகுதியில் உள்ளவர்களின் தொழில்முனைவு திறன் பாராட்டத்தக்கது.

    குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்துறையின் வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழும் கோவையில், பல்லாயிரக்கணக்கான குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஜவுளி தவிர பாதுகாப்பு துறை சார்ந்த பொருட்கள் உற்பத்தியிலும் முக்கிய இடம் வகிக்கிறது.

    கொரோனா பெருந்தொற்று பாதிப்பதால் ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி இப்பகுதியை சேர்ந்த தொழில்முனைவோர் தொழிலை மேம்படுத்தியதற்கு பாராட்டு. சவால்களை வாய்ப்பாக பயன்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டில் 440 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    பெருந்தொற்று பாதிப்புக்கு பிந்தைய காலத்தில் இந்திய ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்பு தொழில்துறை 44 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை அளவை எட்டியிருக்கிறது. இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ மற்றும் சர்வதேச ஆலோசனை அமைப்பான கியர்னி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகளின் படி, 2026-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 81 சதவீதம் அதிகரித்து, 65 பில்லியன் டாலரை எட்டும்.

    இதன் மூலம் 7.5 லட்சம் முதல் ஒரு கோடி வரை புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் உரிய காலத்தில் செயல்படுத்தப்பட்டதே இதற்கு காரணம்.

    கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை இரண்டாவது இடம் வகிக்கிறது. அத்துடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வருவாயிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

    நாட்டில் குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்சார்பு இந்தியாவுக்கு மிகச்சிறந்த உதாரணமாக ஜவுளித்தொழில் திகழ்கிறது. இந்தியா பஞ்சு பற்றாக்குறை உள்ள நாடாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×