search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை பகுதியில் விளைச்சல் குறைவால் மாம்பழங்கள் விலை அதிகரிப்பு
    X

    செங்கோட்டை கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மாம்பழங்கள்.

    செங்கோட்டை பகுதியில் விளைச்சல் குறைவால் மாம்பழங்கள் விலை அதிகரிப்பு

    • செங்கோட்டை பகுதியில் விளைச்சல் குறைவால் மாம்பழங்கள் விலை அதிகரித்துள்ளது.
    • சீசன் காலமான தற்போது பருவநிலை மாற்றத்தால் காற்று அதிகளவில் இல்லாமல் மரங்கள் விளைச்சல் குறைந்துள்ளதாக செங்கோட்டை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை, கண்ணுப்புளி மெட்டு, பண்பொழி, வல்லம், புளியரை, தெற்குமேடு உள்ளிட்ட பகுதி களில் அதிகளவில் மா சாகுபடி செய்ய ப்பட்டு விவசயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்த பகுதிகளில் விவசாயிகள் நெல்லுக்கு அடுத்தபடியாக மா விவசாயத்தில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலமான ஏப்ரல், மே, ஜுன் மாதம் தோப்புகளில் உள்ள மா மரங்களில் மாங்காய்கள் கொத்துக்கொத்தாக காய்த்து தொங்கும். சாலையோரம் உள்ள மரங்களில் இக்காட்சியை சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுத்து செல்வார்கள்.

    செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இமாம்பசந், சப்போட்டா, அல்போன்ஸா, கிளிமூக்கு, மல்கோவா உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மாதங்கள் இப்பகுதியில் மா அறுவடை செய்யப்படுகிறது.

    நகர்புறங்களில் இருப்பது போன்று குடோன்களில் இருப்பு வைத்து தேவைக்கேற்ப செயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் இருக்கும் தோப்புகளில் இருந்து இறக்கப்படும் மாம்பழங்கள் சாலையோர கடைகளுக்கு நேரடியாக வியாபாரத்துக்கு வந்துவிடுகிறது.

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சீசன் காலமான தற்போது பருவநிலை மாற்றத்தால் காற்று அதிகளவில் இல்லாமல் மரங்கள் விளைச்சல் குறைந்துள்ளதாக செங்கோட்டை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் மா விலை அதிகரித்துள்ளது. மாம்பழங்கள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு கிலோவுக்கு ரூ. 50 முதல் ரூ. 150 வரை விற்கப்படுகிறது.

    இதுபற்றி இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மாம்பழங்களை பதப்படுத்தி வைக்க இப்பகுதிகளில் சேமிப்பு கிடங்கு ஏதும் இல்லை. எனவே இங்கு விளையும் மாம்பழங்களை வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கு கொடுக்க வேண்டிய சூழல் எங்களுக்கு ஏற்படுகிறது.

    தமிழக அரசு இப்பகுதியில் மாம்பழங்களை பதப்படுத்தி வைக்கும் அளவில் ஒரு சேமிப்பு கிட்டங்கி அமைத்தால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். கிட்டங்கி வசதி இருந்தால் வெளிநாடுகளுக்கும் இங்கு விளையும் மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும்.

    இதனால் தொழில் வர்த்தக ரீதியாக செங்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதி மாங்காய் உற்பத்தியாளர்கள் முன்னேர்வதோடு அரசுக்கும் வருவாய் கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×