search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயில் தங்கத்தை உருக்கும் பணி பக்தர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப் படுகிறது- அமைச்சர் சேகர்பாபு
    X

    திருவாரூர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு 

    கோயில் தங்கத்தை உருக்கும் பணி பக்தர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப் படுகிறது- அமைச்சர் சேகர்பாபு

    • தெய்வத்திற்கு பயன்படுகின்ற நகைகளை பாதுகாப்பு அறையில் வைத்திருக்கின்றோம்.
    • இந்த பணி ஆன்மீகவாதிகளால் பாராட்டப் படுகின்றது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவரிடம் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் திருக்கோவில் நகையெல்லாம் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி முறைகேடு நடப்பதாக தெரிவித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அமைச்சர் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நானும், துறையின் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டோம். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு சில பொருட்கள் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப் பட்டிருந்தை பற்றி கேட்டபோது அது தெய்வத்திற்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கையான பலமாற்று பொன் இனம் என்று சொன்னார்கள்.

    தெய்வத்திற்கு பயன்படுகின்ற நகைகளை நாங்கள் முறையாக பதிவிட்டு பதிவேட்டில் வரவு வைத்துக் கொண்டு பாதுகாப்பு அறையில் வைத்திருக்கின்றோம். தெய்வத்திற்கு முழுவதும் பயன்படாத பலமாற்று பொன்னினங்களை மூட்டையாக கட்டி வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள் இதை உருக்குதற்கு ஏதேனும் ஆணை இல்லையா, மாற்றுவழி இல்லையா என்று துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டேன்.

    1977 ஆம் ஆண்டு இதற்காக ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கின்றது. பல்வேறு திருக்கோயிலில் நகைகளை உருக்கி அதனை வங்கியில் டெபாசிட் செய்து அதன் வட்டித் தொகையை அந்தந்த திருக்கோயில்களுக்கு செலவிட்டு வருகிறோம்,

    அந்த திருக்கோயிலின் திருப்பணிக்கு ஏதாவது தங்கம் தேவைப்பட்டால் வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருக்கின்ற தங்கத்தை திரும்ப பெற்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என அறநிலையத்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தார்கள்.

    இது ஒரு அருமையான திட்டம். இந்த திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முழுமையாக செயல்படாமல் இருந்தது. அதனால் தமிழகத்தை மூன்று மண்டலங்களாக பிரித்து மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து அவர்களின் நேரடி பார்வையில் தங்கத்தை பிரிக்கின்ற பணியினை மேற்கொண்டிருந்தோம். இடையில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றார்கள்.

    நீதிமன்றமும் இந்த தங்கத்தை பிரிக்கின்ற பணிக்கு தடை ஏதும் விதிக்கவில்லை. பரம்பரை அறங்காவலர்கள் இருக்கின்ற திருக்கோயில்களில் தங்கத்தை பிரித்தெடுக்கின்ற பணியை மேற்கொள்ளலாம், பரம்பரை அறங்காவலர்கள் இல்லாத திருக்கோயில்களில் அறங்காவலர்களை நியமித்து பின்னர் பணியினை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அந்த வகையில் இருக்கன்குடியில் 27 கிலோ தங்கத்தை உருக்கி அதனை வங்கியிலே டெபாசிட் செய்ததில் வட்டியாக மாதத்திற்கு 2 லட்சம் என்ற விதத்தில் ஆண்டிற்கு 24 லட்சம் ரூபாய் அந்த திருக்கோவிலுக்கு வருமானமாக வந்து கொண்டிருக்கிறது.

    அதேபோல தேவி பவானி அம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற சுமார் 130 கிலோ எடை கொண்ட பலமாற்று பொன் இனங்களை மும்பையில இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஆலையிலே உருக்கி 101 கிலோ தங்கத்தை நம்மிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.

    அந்த தங்கமும் வைப்பு நிதிக்கு சென்றால் ஆண்டிற்கு சுமார் ஒரு கோடி 2 லட்சம் ரூபாய் வருமானம் அத்திருக்கோயிலின் திருப்பணிக்கு கிடைக்கும்.

    இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் எந்தவித பயன்பாட்டிலும் இல்லாத தங்கத்தை ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்குவதற்கு முன்னால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற குழுவினரால் முழுவதுமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டு, யாராவது பக்தர்கள் விரும்பினால் அவர்களின் முன்னிலையிலேயே அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    இது ஒட்டுமொத்தமாக திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவுகின்ற ஒரு நல்ல பணி. உண்மையிலேயே ஆன்மீக உலகத்திற்கு முதலமைச்சர் அவர்களால் செய்யப்படுகின்ற இந்த பணி ஆன்மீகவாதிகளால் பாராட்டப்படுகின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×