search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டப்பணிகள் மும்முரம்

    • தாமிரபரணி வெள்ளக்கால்வாய் திட்டம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • கால்வாய் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் நிரம்ப மழைப்பொழிவையே பெரிதும் நம்ப வேண்டி உள்ளது.

    கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்

    மேலும் அதிகப்படியான மழைப்பொழிவால் கிடைக்கும் வெள்ளநீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக கடலில் வீணாக கலக்கும் நிலையே தற்போது வரை தொடர்கிறது.

    இதனால் அதிகளவு மழை பெய்யும் போது வெள்ள நீர் கூட சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை இன்று வரை தொடர்கிறது.

    வெள்ளக்கால்வாய் திட்டம்

    இதனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறண்ட சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறை இணைக்கும் வகையில் தாமிரபரணி வெள்ளக்கால்வாய் திட்டம் 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    நெல்லை மாவட்டம் வெள்ளாங்குழி என்ற இடத்தில் தொடங்கி சேரன்மகாதேவி, தருவை, கண்டித்தான்குளம் வழியாக மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, திசையன்விளை, எம்.எல்.தேரி வரை 75 கிலோ மீட்டர் நீளத்தில் இந்த கால்வாய் அமைக்க திட்டமிட்டு பணிகள் நடக்கிறது.

    தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு என 3 நதிகளை இணைக்கும் வகையில் உருவாகும் இந்த திட்டம் ரூ. 938 கோடியே 85 லட்சம் செலவில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் இன்னும் இத்திட்டம் முடியவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    செப்டம்பர் மாதம்

    இந்த திட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 4 நிலைகளாக பிரித்து பணிகளை செய்து வருகின்றனர். இதில் 3 நிலைகளில் பணிகள் 100 சதவீதம் நிறைவடைத்துள்ளது.

    பொன்னாக்குடி அருகே கால்வாயின் 30-வது கிலோ மீட்டரில் 6 வழிச்சாலை பாலம் அமைக்கும் பணியும், திசையன்விளை எம்.எல்.,தேரியில் கால்வாய் அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. பாலம் அமைக்கும் பணியை பொறுத்தவரை வருகிற ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பாலம் அமைக்கும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது. கால்வாய் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இந்த பணிகளும் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் இத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில் மழை காலத்தில் பெறப்படும் வெள்ள நீரால் 23 ஆயிரத்து 40 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலை உருவாகும். நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி மக்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதி மக்களும் பயனடைவார்கள் என்றனர்.

    Next Story
    ×