search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தற்கொலை
    X

    மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தற்கொலை

    • போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததால் மனவேதனையில் இருந்த நிசாந்த் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • நிசாந்த் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் மனைவி அப்ரினை காதலித்து திருமணம் செய்து உள்ளார்.

    போரூர்:

    சென்னை, எம்.ஜி.ஆர். நகர், கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மகன் நிசாந்த் (வயது24). தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு நிசாந்த், கே.கே. நகர் பகுதியில் நண்பர்களுடன் குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர், தனது மோட்டார் சைக்கிளில் ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் நிலைய ஏட்டு பார்த்திபன் மற்றும் போலீஸ்காரர் கார்த்திக் ஆகியோர் நிசாந்த்தை நிறுத்தி விசாரித்தனர்.

    அப்போது அவர் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்தது தெரிந்தது. இதையடுத்து மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக நிசாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அபராத தொகையை செலுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொள்ளும்படி கூறி வண்டியை பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து நிசாந்த் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார். நள்ளிரவு வீட்டுக்கு வந்த நிசாந்த் மோட்டார் சைக்கிளை போலீசார் பறித்து கொண்டதாகவும் காலையில் சென்று அபராத தொகை செலுத்த வேண்டும் என்று மனைவி அப்ரினிடம் கூறி புலம்பினார். மிகவும் மனவேதனையில் இருந்த அவருக்கு மனைவி ஆறுதல் கூறிவிட்டு தூங்கிவிட்டார்.

    இந்த நிலையில் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததால் மனவேதனையில் இருந்த நிசாந்த் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் அப்ரின் எழுந்து பார்த்த போது கணவர் நிசாந்த் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தார். இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நிசாந்த் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நிசாந்த் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் மனைவி அப்ரினை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×