என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சார்ஜ் போட்ட போது செல்போன் வெடித்து வாலிபர் உடல் கருகி பலி
    X

    சார்ஜ் போட்ட போது செல்போன் வெடித்து வாலிபர் உடல் கருகி பலி

    • செல்போன் வெடித்து அர்ஜூன் பலியானதை அடுத்து சம்பவ இடத்தில் இன்று காலை தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
    • செல்போன் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரைச் சேர்ந்தவர் அர்ஜூன் (34). பி.ஏ. பட்டதாரியான இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு யஸ்வந்த் (13), விவின் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    யஸ்வந்த் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பும், விவின் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூன் உள்ளிட்ட சிலர் இந்த பகுதியில் இடத்தை வாங்கினர். அதில் அர்ஜூன் சிமெண்ட் ஷீட்டால் மேயப்பட்ட வீடு அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அந்த வீட்டின் அருகேயே சிறிதாக சிமெண்ட் ஷீட் போடப்பட்டு சுற்றிலும் தென்னை ஓலையால் மறைப்பு போடப்பட்டு சிறிய வீடு ஒன்றையும் கட்டி உள்ளார்.

    நேற்று இரவு அர்ஜூன் தனது 2-வது மகன் விவினை அதே பகுதியில் உள்ள தனது தாய் கனகராணி என்பவரது வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு வந்தார். ஒரு வீட்டில் அர்ஜூனின் மனைவி கஸ்தூரி, மூத்த மகன் யஸ்வந்த் ஆகியோர் தூங்கிக் கொண்டு இருந்தனர். மற்றொரு வீட்டில் அர்ஜூன் மட்டும் தனியாக தூங்கினார்.

    அப்போது அர்ஜூன் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவில் திடீரென செல்போன் வெடித்து அவர் தங்கி இருந்த வீட்டில் தீப்பிடித்தது. மேலும் அவர் மீதும் தீப்பற்றியது.

    நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் உதவிக்கு வரவில்லை. இதனால் அர்ஜூன் தங்கி இருந்த குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை.

    அர்ஜூனின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அவரது மனைவி கஸ்தூரி மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனாலும் உடல் முழுவதும் தீப்பிடித்த அர்ஜூனை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் தனது மனைவி கண் முன்னே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.

    இதையடுத்து கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் முருகேசன் தலைமையில் முன்னணி தீயணைப்பு வீரர்கள் முருகன், கோபாலகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் தீ அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கும் பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    பின்னர் பலியான அர்ஜூன் உடலை மீட்டனர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன் வெடித்து அர்ஜூன் பலியானதை அடுத்து சம்பவ இடத்தில் இன்று காலை தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். செல்போன் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×