என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியாக வேலைக்கு செல்லும் பெண்களிடம் பாலியல் சில்மிஷம்- தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
    X

    தனியாக வேலைக்கு செல்லும் பெண்களிடம் பாலியல் சில்மிஷம்- தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது அவரை ஒரு வாலிபர் வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாலிபரை தேடிவந்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அனுமந்தீர்த்தம், மத்தூர் ஆகிய பகுதிகளில் பெண்கள் சிலர் தங்களது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக கிடைக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    அவ்வாறு வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிற்கு திரும்பி வரும்போது இரவு நேரம் ஆகிவிடுவதால், தனியாக நடந்து வர அஞ்சி வந்தனர்.

    இந்த நிலையில் ஊத்தங்கரையை அடுத்த அனுமந்தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு தனியாக திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்து கட்டிபிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பெண் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    இதேபோன்று சாமல்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (வயது23) என்பவர் அங்குள்ள தனியார் நூல் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது அவரை ஒரு வாலிபர் வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.

    இதுகுறித்து வெண்ணிலா சாமல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாலிபரை தேடிவந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தலைமறைவான வாலிபரை பிடிக்க உஷார்படுத்தினர். மேலும், சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் 2 இடங்களில் பெண்களை வழிமறித்து பாலியல் சில்மிஷ சம்பவங்களில் ஈடுபட்டவர் ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதனால் தலைமறைவான வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அந்த வாலிபரை நேற்று ஊத்தங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கைதான வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மடத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) என்பதும் இவர் தான் 2 பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், இவர் மீது தருமபுரி, சென்னை, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைதான முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் கைது செய்ததன் மூலம் ஊத்தங்கரை, மத்தூர், சாமல்பட்டி ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் நிம்மதி அடைந்தனர்.

    Next Story
    ×