search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடனை செலுத்துமாறு தனியார் நிதி நிறுவனம் நெருக்கடி: 11 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தற்கொலை
    X

    கடனை செலுத்துமாறு தனியார் நிதி நிறுவனம் நெருக்கடி: 11 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தற்கொலை

    • கடந்த மாதம் குழுவிற்கு கட்ட வேண்டிய பணம் செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது.
    • பணம் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன குழு ஊழியர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அய்யாமாளிடம் கடன் தவணைத் தொகையை செலுத்த கோரி வற்புறுத்தி உள்ளனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆண்டாத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர்கள் சக்தி குமார்-அய்யம்மாள் தம்பதியினர். சக்திகுமாருக்கு முதல் திருமணமாகி விவாகரத்தான நிலையில் இரண்டாவதாக அய்யம்மாளை பெரியோர்கள் சம்மதத்துடன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    அவர்களது மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த நிலையில் அதற்கு சான்றாக கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தம்பதிக்கு சிவமணி என்ற ஆண் குழந்தை பிறந்தது. கொத்தனாராக வேலை பார்த்து வரும் சக்திகுமாருக்கு சில மாதங்களாக சரிவர வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்துள்ளது.

    இதன் காரணமாக குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. குழந்தையை வளர்க்கவும், குடும்பம் நடத்தவும் தம்பதியினர் தவித்து வந்தனர். இதனை சரிசெய்யும் நோக்கத்தில் அய்யம்மாள் தனியார் நிதி நிறுவன மகளிர் குழுவில் ரூ.50,000 கடன் பெற்று மாதந்தோறும் ரூ.2,300 தவணைத்தொகையாக செலுத்தி வந்தார்.

    கடந்த மாதம் குழுவிற்கு கட்ட வேண்டிய பணம் செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது. பணம் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன குழு ஊழியர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அய்யாமாளிடம் கடன் தவணைத் தொகையை செலுத்த கோரி வற்புறுத்தி உள்ளனர். மேலும் கால அவகாசம் கேட்ட அய்யமாளிடம் கடுமையான வார்த்தைகளினாலும் திட்டி தீர்த்துள்ளனர்.

    11 மாத கைக்குழந்தையுடன் அய்யம்மாள் கண்ணீர் வடித்து நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது குழு தொகையை கட்டியுள்ளனர். பலரது முன்னிலையில் அவமானமாக எண்ணிய அய்யம்மாள் கணவரிடமும், நெருங்கிய உறவினர்களிடமும் கூறி அழுதுள்ளார். கணவரும் அவரை தேற்றினார்.

    இந்த நிலையில் அண்டை வீட்டாருடன் பேசிக்கொண்டிருந்த அய்யம்மாள் இரவு வீட்டிற்குள் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதற்கிடையே வீட்டிற்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் மட்டும் நீண்டநேரமாக கேட்டுக்கொண்டே இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அய்யம்மாள் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதுபற்றி உடனடியாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் விரைந்து வந்த ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி தலைமையிலான போலீசார் அய்யம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனியார் நிதி நிறுவன குழு பிரச்சனையால் அய்யம்மாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாயை இழந்தது கூட தெரியாமல் தவித்து வந்த 11 மாத கைக்குழந்தையை உறவினர்கள் கையில் வைத்து கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×