search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது
    X

    கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது

    • கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
    • நள்ளிரவு ஆகியும் பாண்டியம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலையார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அவருக்கும், அதே மில்லில் வேலை பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டினுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.

    அவர் தான் பாண்டியம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×