என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருதுநகர் அருகே பெண் தொழிலாளி- விவசாயி படுகொலை
- வனராஜ் கான்சாபுரம் கிராம நிர்வாக அலுவலர் நாராயணகுமாரிடம் சென்று தனது மனைவியை கொன்றதாக கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
- நாராயணகுமார் கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வனராஜை கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அத்திகோவில் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்தவர் வனராஜ் (வயது30). இவரது மனைவி ஏசுராணி (எ) உமா (28). இவரும் அதே தோப்பில் தொழிலாளியாக வேலை பார்த்தார்.
சம்பவத்தன்று இரவு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த வனராஜ் டார்ச்லைட்டால் மனைவி ஏசுராணியை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு ரத்த போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து வனராஜ் கான்சாபுரம் கிராம நிர்வாக அலுவலர் நாராயணகுமாரிடம் சென்று தனது மனைவியை கொன்றதாக கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதுபற்றி நாராயணகுமார் கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வனராஜை கைது செய்தனர்.
திருச்சுழி அருகே உள்ள ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (50). விவசாயியான இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து குடிபோதையில் மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மகன்கள் ராஜேந்திரன் (23), ராம்குமார் ஆகிய இருவரும் ஆத்திரமடைந்தனர்.
ராம்குமார் தூண்டுதலின் பேரில் தந்தை குருசாமியை ராஜேந்திரன் கம்பால் அடித்து துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதுபற்றி ராஜேந்திரன் ராஜகோபாலபுரம் கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமியிடம் சென்று தனது தந்தையை கொன்று விட்டதாக கூறினார்.
அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் பரளச்சி போலீசில் புகார் செய்தார். குருசாமியின் மகன்கள் ராஜேந்திரன், ராம்குமார் ஆகிய இருவரும் மீதும் போலீசார் வழக்குப்பதிந்தனர். அவர்களில் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள ராம்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.






