search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளமடம் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதியது - 9 பேர் படுகாயம்
    X

    வெள்ளமடம் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதியது - 9 பேர் படுகாயம்

    • விபத்துக்கு காரணமான வளைவு பகுதியில் சாலையின் நடுவே தடுப்பு சுவர் இல்லாததே விபத்துக்கு காரணம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
    • விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு பஸ் டிரைவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ரமேஷ் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக ஆரல்வாய்மொழி உள்ளது. திருநெல்வேலி-நாகர்கோவில் 4 வழிச்சாலையில் உள்ள இந்த பகுதியில் தொடர் விபத்துக்கள் நடந்து வருகின்றன.

    இங்குள்ள வெள்ளமடம் அருகே உள்ள லாயம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடன கலைஞர்கள் வந்த கார், எதிர்திசையில் பாய்ந்து அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள்.

    விபத்துக்கு காரணமான வளைவு பகுதியில் சாலையின் நடுவே தடுப்பு சுவர் இல்லாததே விபத்துக்கு காரணம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து அங்கு தடுப்பு சுவர் கல் வைக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அதன்மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி வருவது பலருக்கும் அதிர்ச்சியளித்து வருகிறது. நேற்று வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற வேன் சென்டர் மீடியனில் மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 19 பேர் உயிர் தப்பினார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை மதுரையில் இருந்து மார்த்தாண்டத்தை நோக்கி சென்ற அரசு பஸ் வந்தது. இந்த பஸ் வெள்ளமடம் அருகே உள்ள குமரன்புதூர் பகுதியில் வந்த போது, எதிரே மோட்டார் சைக்கிள் வந்துள்ளது. அதற்கு வழி விட முயன்றபோது, அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியாவில் மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த ஆரோக்கியமேரி (வயது 57), எலியாட் (9), களியக்காவிளையை சேர்ந்த ஷோபா (40), சுபின், அஜின், தெங்கம்புதூர் லட்சுமி (30), செண்பகராமன்புதூர் சங்கர் (45), காப்பிக்காடு விஜிலா (42) மற்றும் தோவாளையைச் சேர்ந்த ஒரு பெண் என 9 பேர் காயம் அடைந்தனர்.

    அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு பஸ் டிரைவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ரமேஷ் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட தடுப்பு கல் தற்போது பல உயிர்களைப் பழிவாங்கும் எமன்ஆக மாறி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தொடர் விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகமும் காவல் துறையினரும் இணைந்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

    Next Story
    ×