என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்தியா கூட்டணியால் எதையும் சாதிக்க முடியாது: வானதி சீனிவாசன்
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்டு மத்திய அரசு முடிவு செய்யும்.
- பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.
திருச்சி:
பா.ஜ.க. மாநில மகளிர் அணி செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. இதில் பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து பாஜகவின் மகளிர் அணி சார்பில் பல்வேறு பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறோம்.
இதில் மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வருகின்றனர்.
இதேபோன்று மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை சந்தித்து இந்த திட்டத்தின் பயன்களை அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்து கூற இருக்கிறோம்.
மேலும் பயனடைந்த பயனாளிகளுடன் செல்பி எடுத்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த இருக்கிறோம். பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் வருடம் தோறும் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பை வழங்கி உள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியதை பிரதமர் மோடி ஏழை மக்களுக்காக செய்துள்ளார். 200 ரூபாய் கேஸ் விலையை குறைத்து இருப்பது அரசியலுக்காக அல்ல. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைப்பேன் என்றுகூறிவிட்டு இதுவரை குறைக்கவில்லை.
அவர்கள் மத்திய அரசு கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்று கூறுவதற்கு தகுதி கிடையாது. ஐ.என்.டி.ஏ. கூட்டணியை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் வெற்றி பெறவும் முடியாது. எத்தனை பேர் சேர்ந்தாலும் ஒன்றும் சாதிக்கவும் முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்டு மத்திய அரசு முடிவு செய்யும். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






