என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் கடும் விலை உயர்வு- 100 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி
- சாம்பார் வெங்காயம் விலை தற்போது 160 ரூபாய்க்கு உயர்ந்து விற்பனையாகி வருகின்றது.
- கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாம்பார் வெங்காயம் வரத்து இல்லாததால் பல கடைகளில் சாம்பார் வெங்காயம் விற்பனை செய்யவில்லை.
கடலூர்:
இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத வகையில் தொடர் மழை பெய்து வருவதால் காய்கறி வரத்து குறைந்து அதிக விலைக்கு விற்பனையாகி வருகின்றது.
இதன் காரணமாக தமிழகத்தில் தக்காளி, சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்), இஞ்சி உள்ளிட்ட பல்வேறு காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை 80 ரூபாய் முதல் 92 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக சற்று குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையாகி வந்தது.
ஆனால் இன்று மீண்டும் மொத்த விற்பனை கடையில் 90 ரூபாய்க்கும், சில்லறை கடைகளில் 100 ரூபாய்க்கும் தக்காளி விலை விற்பனையாகி வருகின்றது. இது மட்டுமின்றி சாம்பார் வெங்காயம் விலை தற்போது 160 ரூபாய்க்கு உயர்ந்து விற்பனையாகி வருகின்றது. ஆனால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாம்பார் வெங்காயம் வரத்து இல்லாததால் பல கடைகளில் சாம்பார் வெங்காயம் விற்பனை செய்யவில்லை.
மேலும் ஒரு சில மொத்த வியாபார கடைகளில் சாம்பார் வெங்காயம் 160 ரூபாய்க்கும், 260 முதல் 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த இஞ்சியின் விலை 300 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து காய்கறிகள் வாங்க முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இது மட்டும் இன்றி தங்களுக்கு தேவையான காய்கறிகளை மிக குறைந்த கிராமில் வாங்கி செல்வதையும், காய்கறிகள் வாங்கும் விலையை காட்டிலும் அதற்கு மாறாக இறைச்சிகள் வாங்கி செல்வதையும் காண முடிகிறது. தொடர் மழை குறைந்து காய்கறிகளின் வரத்து சீரான பிறகு காய்கறி விலை குறைந்து விற்பனை செய்யப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.






