search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோர வியாபாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
    X

    சாலையோர வியாபாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

    • சந்தையை சுற்றியும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், சந்தைக்குள் பொதுமக்கள் வருவதில்லை.
    • திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் தென்னம்பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் சந்தை பகுதிகளில் ரோட்டோரம் வியாபாரிகள் காய்கறி கடைகளை அமைக்க கூடாது எனவும், இதனை கண்டித்தும் இன்று அதிகாலை 4மணி முதல் உழவர் சந்தையின் கேட்டை மூடிவிட்டு தென்னம்பாளையம் சந்தை முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    தென்னம்பாளையம் உழவர் சந்தையில் முறையாக பதிவு செய்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் சந்தையை சுற்றியும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், சந்தைக்குள் பொதுமக்கள் வருவதில்லை.

    சாலையோரம் இருக்கும் கடைகளில் காய்கறி வாங்கி விட்டு செல்கிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் போது 2 நாட்கள் கடைகள் அமைக்காமல் இருக்கிறார்கள். இதன் பின்னர் மீண்டும் கடைகளை அமைத்து வியாபாரத்தை தொடங்கி வருகிறார்கள். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சாலையோர வியாபாரிகள் கூறுகையில், உழவர் சந்தைக்கு 100 மீட்டருக்கு அப்பால் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் , விவசாயிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் கடைகள் அமைத்து வரக்கூடிய நிலையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலும் , மோதல் சூழ்நிலையை உருவாக்கி சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகள் செயல்படுவதாக சாலையோர வியாபாரிகள் குற்றம் சாட்டினர். இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

    Next Story
    ×