search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ம.தி.மு.க.வில் இருந்து அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி விலகல்- வைகோவுக்கு கடிதம் அனுப்பினார்
    X

    ம.தி.மு.க.வில் இருந்து அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி விலகல்- வைகோவுக்கு கடிதம் அனுப்பினார்

    • பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்து அரசியல் செய்துவந்த என்னால் இனியும் உங்களுடன் பயணிக்க முடியாது.
    • உங்கள் மீது நம்பிக்கை வைத்து அன்று உயிர் நீத்த உண்மை தொண்டர்களுக்காக கட்சியை உங்கள் காலத்திலேயே தி.மு.க.வுடன் இணைத்துவிடுவது நல்லது.

    திருப்பூர்:

    சமீபத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவுக்கு, அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி எழுதிய கடிதத்தில், 'உங்களின் அண்மைக் கால நடவடிக்கைகளால், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. கட்சியின் நலன் கருதி ம.தி.மு.க.,வை தி.மு.க.,வுடன் இணைத்து விடுங்கள் என கூறியிருந்தார்.

    அவரது கடிதத்திற்கு பதிலளித்த வைகோ, 'தி.மு.க.,வில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. துரைசாமி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்றார்.

    இந்தநிலையில் திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். இது குறித்து அவர் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ம.தி.மு.க. துவங்கப்பட்ட காலத்தில் இருந்து உங்கள் குடும்பத்தை சார்ந்த யாரும் கட்சி பதவிக்கு வர மாட்டார்கள் என்று தொடர்ந்து பேசி வந்தீர்கள். அதை தலைமைக்கழக நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் முழுவதுமாக நம்பினார்கள். பிற்காலத்தில் உங்களின் தவறான அரசியல் நிலைப்பாடு காரணமாக தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி தி.மு.க.வில் இணைந்து விட்டனர்.

    ம.தி.மு.க. துவங்கப்பட்ட காலத்திலிருந்து சட்ட மன்றம், பாராளுமன்றம், உள்ளாட்சி மன்ற தேர்தல்களின் போது தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி என தனித்தனியாக நிதி திரட்டியுள்ளோம். ஆனால் நீங்கள் ஒருமுறை உயர்நிலைக்குழு கூட்டத்திலோ, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலோ, பொதுக்குழு கூட்டத்திலோ வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றதில்லை.

    பரந்த ஜனநாயகம் பேசிய நீங்கள், கட்சிக்கென்று பொருளாளர் இருந்தும், அவர் கையொப்பமின்றி நீங்களாகவே 17 ஆண்டுகளுக்கு மேலாக காசோலைகளில் தன்னிச்சையாக கையொப்பமிட்டு வங்கியில் பணம் எடுத்து வருகிறீர்கள். எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இது போன்ற தவறு நடக்கவில்லை.

    பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்று நீங்கள் முழங்கிவிட்டு அவற்றை மனசாட்சியின்றி காற்றில் பறக்கவிட்டு இப்படி சுயநலமாக நீங்கள் இருப்பீர்கள் என்று கழக தோழர்கள் யாரும் நினைக்கவில்லை.

    பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்து அரசியல் செய்துவந்த என்னால் இனியும் உங்களுடன் பயணிக்க முடியாது. உங்கள் மீது நம்பிக்கை வைத்து அன்று உயிர் நீத்த உண்மை தொண்டர்களுக்காக கட்சியை உங்கள் காலத்திலேயே தி.மு.க.வுடன் இணைத்துவிடுவது நல்லது. கடந்த 30 ஆண்டுகளாக ஏமாற்றியதை போல், இனியும் ஏமாற்ற வேண்டாம் என உங்களிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டு இன்று முதல் ம.தி.மு.க.வின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட எல்லா பொறுப்புகளிலும் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×