search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சினிமா பட வில்லன்களை போல் மிரட்டல்: ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட 11 பேர் கைது
    X

    சினிமா பட வில்லன்களை போல் மிரட்டல்: ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட 11 பேர் கைது

    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • கொலை வழக்கில் தொடர்புடையதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல்(23). இவர் கடந்த 13-ந்தேதி கோவை கோர்ட்டு அருகே 5 பேர் கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.

    மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியதோடு மட்டுமல்லாமல், கையில் ஆயுதங்களுடன் அவர்கள் சாவகாசமாக நடந்து சென்றது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோர் கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த குரங்குஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

    இதில் கோகுல் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டதும், இந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே குரங்குஸ்ரீராமின் நண்பர்கள் கோகுலை கொன்றதும் தெரியவந்தது.

    கோகுல் கும்பலும், குரங்கு ஸ்ரீராம் கும்பலும் கட்டப் பஞ்சாயத்து, அடி-தடி மோதலில் அடிக்கடி ஈடுபட்டுள்ளனர்.

    இதுதவிர இவர்கள் சமூக வலைதளங்களிலும் வீடியோக்களை வெளியிட்டு அடிக்கடி மோதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    குரங்குஸ்ரீராம் கொலையில் தொடங்கி கோகுல் கொலை வரை அவர்கள் சமூக வலைதள பதிவுகள் மூலம் மோதிக்கொண்டனர்.

    குரங்கு ஸ்ரீராமை கொன்றதுமே அவரது நண்பர்கள் குரங்கு ஸ்ரீராமின் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்கப்படும் என்ற வாசகத்தை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    மேலும் ஸ்ரீராம் பிரதர்ஸ், ஸ்ரீராம் பிளட்ஸ் என்ற பெயரில் சினிமாவையே மிஞ்சும் வகையில், கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சினிமா பாடல்களையும், வசனங்களையும் ஒலிக்க விட்டு நடந்தபடி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

    அதிலும் ஒரு பெண்ணின் கையிலும் உருட்டு கட்டையை கொடுத்து அவரின் பின்னால் 5 பேர் நடந்து வருவது போல பாடலை ஒளிபரப்பி தங்களை சினிமா வில்லன்களை போலவே காட்டி கொண்டதும் தெரியவந்தது.

    இப்படி ரவுடிகள் தங்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிடுவதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை களை எடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

    யார்? யார் எல்லாம் வீடியோக்களை வெளியிட்டனர் என்பதை கண்டறிய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் ஒரு குழுவையும் அமைத்தனர்.

    அந்த குழுவினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்வையிட்டு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் முடிவில் இன்ஸ்டாகிராமில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வீடியோ மற்றும் வெறுப்பை தூண்டும் வகையிலும் கருத்துக்களை பதிவிட்ட 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    தொடர்ந்து இது போன்று வேறு யாராவது இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை பகிர்ந்துள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×