search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் தங்கமணி
    X
    முன்னாள் அமைச்சர் தங்கமணி

    சட்டசபையில் சகோதரியின் இறப்பை குறிப்பிட்டு தழுதழுத்த குரலில் பேசிய தங்கமணி

    • தயவுசெய்து சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து அரசே ஏற்று நடத்த வேண்டும்.
    • மக்களை பாதுகாக்க அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று தொழில்துறை, சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்க மணி (அ.தி.மு.க.) பேசியதாவது:-

    தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மாதான் போர்டு தொழிற்சாலை கொண்டு வந்தார். நோக்கியா கம்பெனி வருவதற்கு வித்திட்டவரும் அம்மாதான். எந்த ஆட்சியாக இருந்தாலும் தொழில் முதலீடு வந்தால்தான் தொழில் வளம் பெருகும்.

    எங்கள் ஆட்சியின் போது 2-வது தொழில் முதலீடு மாநாட்டை எடப்பாடியார் நடத்தினார். சீக்கிரம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதாக கூறி உள்ளீர்கள்.

    புரட்சித்தலைவி அம்மா 1992-ம் ஆண்டில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வந்து தொழில் தொடங்குபவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் அனுமதி பெற்றுத் தந்தார். எடப்பாடியார் ஆட்சியிலும் ஒரு மாதத்தில் அனுமதி கிடைத்தது. ஆனால் இன்று எனக்கு கிடைத்த தகவல் படி இதில் காலதாமதம் ஆவதாக தெரிகிறது. இதை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

    நோக்கியா கம்பெனி மிக சிறப்பாக செயல்பட்ட நிலையில் சட்டத்தை மாற்றிய காரணத்தால் அந்த ஆலை மூடப்பட்டது. இதேபோல் தென் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையை பாதுகாக்கும் கடமை இந்த அரசுக்கு உள்ளது.

    புரட்சித்தலைவி அம்மாவை தொடர்ந்து எடப்பாடியாரும் தமிழ்நாட்டில் தொழில் துறை வளர பாடுபட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தால்தான் பலர் தொழில் தொடங்க முன் வருவார்கள். மின் கட்டண உயர்வால் இன்றைக்கு சிறு தொழில்கள் பாதிக்கப்படுகிறது.

    கோவை பகுதிகளில் தொழிற்சாலை நடத்துபவர் பலரிடம் அமைச்சர்கள் கேட்டுப்பார்த்தால் தெரியும்.

    நீங்கள் தந்துள்ள கொள்கை விளக்க குறிப்பில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழில் வளம் நன்றாக இருந்ததாக குறிப்பிட்டு உள்ளீர்கள். இன்றைக்கு செங்கல்சூளைக்கு கூட மணல் எடுக்க முடியாத நிலை உள்ளது. எங்கள் ஆட்சியில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அதிக அளவு டெக்ஸ்டைல் தொழிற்சாலை, சாயப்பட்டறைகள் உள்ளன. இங்கு இது தவிர்க்க முடியாத தொழில். இந்த சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆற்றில் மாசு கலப்பதை தடுக்க எடப்பாடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தார்.

    இந்த நேரத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும். ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் புற்று நோய் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கூட எனது சகோதரி புற்று நோயால் உயிரிழந்துள்ளார்.

    (இவ்வாறு பேசும்போது அவரது குரல் தழுதழுத்தது...கண்ணீர் மல்க அவர் தொடர்ந்து பேசினார்).

    இந்த அரசுக்கு நான் வேண்டுகோள் வைப்பது தயவுசெய்து சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து அரசே ஏற்று நடத்த வேண்டும். சாயப்பட்டறை சுத்திகரிப்பு நிலையத்தை அரசே நடத்தினால்தான் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். இப்போது ஏற்படும் 10 இறப்புகளில் ஒரு இறப்பு புற்றுநோயால் ஏற்படுகிறது.

    எனவே மக்களை பாதுகாக்க அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தங்கமணி பேசினார்.

    Next Story
    ×