search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே வழிப்பறி: தங்க நகை வியாபாரியை தாக்கி ரூ.43 ½ லட்சம் கொள்ளை
    X

    கோவை அருகே வழிப்பறி: தங்க நகை வியாபாரியை தாக்கி ரூ.43 ½ லட்சம் கொள்ளை

    • பணத்தை பறி கொடுத்த 2 பேரும் கொள்ளை குறித்து கே.ஜி. சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கொள்ளை கும்பலை பிடிக்க பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கூட்நாட்டை சேர்ந்தவர் பரத் (வயது 50). தங்க நகை வியாபாரி. இவர் தங்கத்தை ஆபரணங்களாக தயாரித்து கோவை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்வது வழக்கம்.

    சம்பவத்தன்று இவர் செயின், மோதிரம், வளையல் உள்பட 600 தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக உறவினரான அதே பகுதியை சேர்ந்த ரோகித் (42) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவைக்கு வந்தார்.

    பின்னர் நகைகளை டவுன்ஹால் ராஜவீதியை சேர்ந்த தங்க நகை வியாபாரி நந்தா கணேஷ் (42) என்பவரிடம் விற்பனை செய்தார். பின்னர் பணம் வாங்குவதற்காக அன்று இரவு பரத், ரோகித் ஆகியோர் தங்க நகை வியாபாரி நந்தா கணேஷின் வீட்டில் தங்கினர்.

    மறுநாள் காலை 5.30 மணிக்கு தங்க நகைகளை விற்ற பணமான ரூ.43.50 லட்சம் பணத்தை அவரிடம் இருந்து பெற்றனர். பின்னர் பணத்தை தங்களது உடலில் ஆடைகளுக்கு இடையே மறைத்து வைத்து விட்டு பாலக்காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிள் காலை 6.30 மணிக்கு வேலந்தாவளம் ரோட்டில் தனியார் ஸ்டீல் கம்பெனி அருகே சென்று கொண்டு இருந்தது.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த படி 2 பேரும், ஒரு காரில் முகமூடி அணிந்த படி 4 பேர் என மொத்தம் 6 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பரத், ரோகித் சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் தாக்கி, கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி பரத், ரோகித் ஆகியோர் உடலில் மறைத்து வைத்து இருந்த ரூ.43.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    பணத்தை பறி கொடுத்த 2 பேரும் இது குறித்து கே.ஜி. சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த கொள்ளை கும்பலை பிடிக்க பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் சாலைகள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×