search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையத்தில் நடந்த கணவன்-மனைவி கொலையில் கள்ளக்காதலிக்கு தொடர்பு
    X

    ராஜபாளையத்தில் நடந்த கணவன்-மனைவி கொலையில் கள்ளக்காதலிக்கு தொடர்பு

    • கூலிப்படையை ஏவி கணவன்-மனைவியை கொலை செய்த இளம்பெண் யார்? என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
    • இளம்பெண் கேரளாவுக்கு தப்பி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75). இவரது மனைவி குருபாக்கியம்(68). ராஜகோபால் தனியார் நூற்பாலையில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ராஜகோபால் பணம் வட்டிக்கு கொடுத்து வந்தார். இந்த நிலையில் ராஜகோபாலும், அவரது மனைவியும் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. அவர்களது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    வீட்டின் படுக்கை அறையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். இந்த கொலைகள் குறித்து தகவல் கிடைத்ததும் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ராஜபாளையம் (பொறுப்பு) டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த இரட்டை கொலையில் துப்புதுலக்க டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் பயிற்சி டி.எஸ்.பி.க்கள் சுதீர், வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா (ராஜபாளையம் வடக்கு), கவுதம்(சிவகாசி கிழக்கு), நம்பிராஜன் (வெம்பகோட்டை), ராமராஜ் (விருதுநகர் சூலக்கரை) ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    கொலை செய்யப்பட்ட ராஜகோபால் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் நூற்பாலைகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், சத்திரப்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறிக்கூடங்கள், மருத்துவ துணி உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிக்கு பல கோடி ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் ராஜபாளையம் முனியம்மன்கோவில் தெருவில் வசித்து வரும் ஒரு இளம்பெண்ணுடன் ராஜகோபாலுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண் இரவு நேரங்களிலும் ராஜகோபாலின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    அப்போது ராஜகோபால் வீட்டில் உள்ள ரகசிய அறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் வைத்திருப்பதை அந்த இளம்பெண் தெரிந்து கொண்டார். அவர் ராஜகோபால் வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை அபகரிக்க திட்டமிட்டிருக்கிறார்.

    அவர் கூலிப்படையை வைத்து ராஜகோபாலையும், அவரது மனைவியையும் கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ராஜகோபால் மற்றும் அவரது மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.

    பின்னர் ராஜகோபால் வீட்டு ரகசிய அறையை திறந்து அங்கிருந்த சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள், கொடுக்கல்-வாங்கல் தொடர்பான ஆவணங்களை திருடி சென்றுள்ளார். மேற்கண்டவை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கூலிப்படையை ஏவி கணவன்-மனைவியை கொலை செய்த அந்த இளம்பெண் யார்? என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் கேரளாவுக்கு தப்பி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    Next Story
    ×