search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து அமைப்புகளுக்கு எதிராக தமிழக தி.மு.க. அரசு செயல்படுகிறது- எச்.ராஜா குற்றச்சாட்டு
    X

    இந்து அமைப்புகளுக்கு எதிராக தமிழக தி.மு.க. அரசு செயல்படுகிறது- எச்.ராஜா குற்றச்சாட்டு

    • சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை காவல் துறை அதிகாரிகளும், அரசும் பின்பற்ற வேண்டும்.
    • 2024-ல் தேசிய அளவில் விடியல் ஆட்சி அமையும் என தமிழக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வந்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் பல இடம்பெற்றுள்ளது. இவற்றினால் மூலதன செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டுக்குள் நிதி பற்றாக்குறை முழுமையாக தீரும். அனைத்து தரப்பு மக்களும் பயனடைக்கூடிய அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பட்ஜெட் ஆகும். இருப்பினும் பிரதமர் மோடி தாக்கல் செய்து விட்டாரே என்ற ஒரே காரணத்துக்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்கட்சிகள் கூறுவது போல் இது தேர்தலுக்கான பட்ஜெட்தான். ஏன் என்றால் ஏழை எளிய மக்களுக்கு போடப்பட்ட பட்ஜெட். அதனால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள்.

    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதித்தார்கள். அங்கே கலவரம் நடக்கவில்லை. திட்டமிட்டே தேசிய அமைப்புகள் செயல்படாமல் இருக்க வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். இதனால் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக சீமானும், திருமாவளவனும் ஊர்வலம் நடத்த அனுமதி தருகின்றனர்.

    இந்து அமைப்புகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை காவல் துறை அதிகாரிகளும், அரசும் பின்பற்ற வேண்டும். 2024-ல் தேசிய அளவில் விடியல் ஆட்சி அமையும் என தமிழக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

    இவர்களுக்கு ஈரோட்டில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இது விடியாத ஆட்சி என்பதே சரி. சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் கடலில் பேனா வைக்கக்கூடாது. அதானி பிரச்சினையால் வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்துதான் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமைதியாகி விட்டன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக புதுவை மாநில பா.ஜனதா சார்பில் பட்ஜெட் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி கடற்கரை சாலை தனியார் உணவகத்தில் நடந்தது.

    மாநில தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். பா.ஜனதா தேசிய செயலாளர் ராஜா பட்ஜெட் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், அசோக் பாபு, சிவசங்கரன், பா.ஜனதா தொழில்துறை பிரிவு மாநில அமைப்பாளர் ராஜகணபதி, முன்னாள் நீதிபதி அருள், மாநில பயிற்சியாளர் பிரிவு இணை அமைப்பாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×