search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளச்சேரி கட்டிட விபத்து: 40 அடி பள்ளத்தில் மேலும் ஒருவர் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல்
    X

    வேளச்சேரி கட்டிட விபத்து: 40 அடி பள்ளத்தில் மேலும் ஒருவர் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல்

    • ஒரு வாலிபர் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காணவில்லை.

    சென்னை:

    சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை- வேளச்சேரி சாலை இணைப்பு சந்திப்பில் 7 மாடி கட்டிடம் கட்டுவதற்காக 40 அடியில் தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கடந்த 5 நாட்களாக பள்ளத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ராட்சத மோட்டார்கள் மூலமாக மழைநீர் வெளியேற்றப்பட்ட போதிலும் கிண்டி ரேஸ் கோர்சில் இருந்து தொடர்ந்து வெள்ளம் வந்து கொண்டே இருந்ததால் மீட்புப் படையினர் கடும் சிரமத்தோடு பணியில் ஈடுபட்டனர்.

    கட்டுமான பணி நடைபெற்ற இடத்திற்கு அருகே செயல்பட்டு வந்த கியாஸ் நிரப்பும் நிலையத்தில் இருந்த 4 பேரும், கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கண்டெய்னரில் அமர்ந்திருந்த சிவில் என்ஜினீயர் ஜெயசீலனும் 40 அடி பள்ளத்தில் விழுந்தனர். இந்த 5 பேரில் 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர்.

    2 பேர் மட்டும் 40 அடி பள்ளத்தில் விழுந்து மூழ்கினார்கள். என்ஜினீயர் ஜெயசீலன் மற்றும் நரேஷ் என்ற வாலிபர் ஆகிய இருவரும் வெள்ளத்தில் மூழ்கி பலியானார்கள்.

    இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. இத்துடன் மீட்பு பணிகள் முடிந்து விட்டதாகவும் கருதப்பட்டது. இந்த நிலையில் 2 பேரின் உயிரை பலி வாங்கிய 40 அடி பள்ளத்தில் மேலும் ஒரு வாலிபர் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    7 மாடி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காணவில்லை. எனவே அவரும் 40 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதையடுத்து நேற்று இரவு விடிய விடிய பேரிடர் மீட்பு படையினர் 40 அடி பள்ளத்தில் தேடினர். இன்றும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, 'தமிழகத்தை சேர்ந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×