search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் கொலை: என்னை அவதூறாக பேசியதால் அடித்துக் கொன்றேன்- கைதான வாலிபர் வாக்குமூலம்
    X

    பெண் கொலை: என்னை அவதூறாக பேசியதால் அடித்துக் கொன்றேன்- கைதான வாலிபர் வாக்குமூலம்

    • மல்லிகா, என்னிடம் பணத்தை கேட்காதே, இனிமேல் வீட்டு பக்கம் வராதே என சத்தம் போட்டார்.
    • பணம் தராமல் ஏமாற்றப்பட்ட விரக்தியில் இருந்த என்னிடம் மல்லிகா தரக்குறைவாக திட்டியது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த கருந்தேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 60). இவருடைய மனைவி மல்லிகா (55). இவர்களுக்கு சண்முகம் (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் கோவையில் கிரீல் கேட் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    இவரது வீட்டின் எதிர்வீட்டை சேர்ந்தவர் சின்ராசு (28). கூலி தொழிலாளி. இவரை, சண்முகம் கோவையில் உள்ள தனது கிரீல் கேட் தயாரிக்கும் கம்பெனிக்கு வேலைக்கு அழைத்து சென்றார்.

    இந்த நிலையில் அங்கு சின்ராசு, ஒரு மாதமே வேலை பார்த்த நிலையில் திடீரென வேலையில் இருந்து நின்று விட்டார். அப்போது அவருக்கு வழங்க வேண்டிய சம்பளம் பணம் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த பணத்தை தருமாறு சண்முகத்திடம் சின்ராசு கேட்டு வந்தார். ஆனால் அவர் கொடுக்கவில்லை. இதனால் பணத்தை கேட்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அவரது தாயார் மல்லிகாவுக்கும், சின்ராசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த சின்ராசு, அங்கு கிடந்த கட்டையை எடுத்து மல்லிகாவை அடித்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த மல்லிகா மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மல்லிகாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சின்ராசை கைது செய்தனர். கைதான அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    நான், மல்லிகாவின் மகன் சண்முகம் என்பவர் கோவையில் நடத்தி வரும் கிரீல் கேட் தயாரிக்கும் கம்பெனியில் கூலி வேலை செய்தேன். பின்னர் சம்பளம் குறைவாக இருந்ததால் நான் வேலையில் இருந்து நின்று விட்டேன். அப்போது எனக்கு வழங்க வேண்டிய சம்பள பணம் ரூ. 10 ஆயிரம் பாக்கி இருந்தது. இந்த பணத்தை சண்முகத்திடம் கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார்.

    இது தொடர்பாக எனக்கும், சண்முகத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சண்முகத்தின் செல்போனில் தொடர்பு கொண்டு பாக்கி பணத்தை கொடுங்கள் என கேட்டபோது, அதற்கு அவர் நான் வெளியூரில் இருக்கிறேன். திரும்பி வந்தபிறகு பேசிக்கொள்ளலாம் என்றார்.

    இதனால் அவரது வீட்டிற்கு சென்று அவரது தாய் மல்லிகாவிடம் உங்களது மகன் சம்பள பணத்தை தரவில்லை, நீங்களாவது பணத்தை தாருங்கள். இல்லையென்றால் உங்களது மகனிடம் பணத்தை தர சொல்லுங்கள் என்றேன்.

    அப்போது மல்லிகா, என்னிடம் பணத்தை கேட்காதே, இனிமேல் வீட்டு பக்கம் வராதே என சத்தம் போட்டார். இதனால் எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். இது எனக்கு அவமானமாக இருந்தது.

    ஏற்கனவே பணம் தராமல் ஏமாற்றப்பட்ட விரக்தியில் இருந்த என்னிடம் மல்லிகா தரக்குறைவாக திட்டியது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நான், அவரை கட்டையால் அடித்துக் கொன்றேன். இவ்வாறு சின்ராசு வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து கைதான சின்ராசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ெஜயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×