search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையே நல்ல தீர்வாக இருக்கும்- ஈஸ்வரன்
    X
    உயிரிழந்த விவசாயிகள் நினைவு ஸ்தூபியில் கொ.ம.தே.க. நிறுவனர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மலர் அஞ்சலி செலுத்திய காட்சி.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையே நல்ல தீர்வாக இருக்கும்- ஈஸ்வரன்

    • தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திறம்பட செயல்பட வேண்டுமானால் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பது நல்ல தீர்வாக இருக்கும்.
    • தற்போது உள்ள இரட்டை தலைமை அந்தக்கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கான தலைமையாக இருக்கலாம்.

    அனுப்பர்பாளையம்:

    1970-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர் பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களது நினைவிடம் பெருமாநல்லூர் ஈரோடு சாலையில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய அமைப்பினர் மற்றும் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, இந்து மக்கள் கட்சியினர் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினர்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க.) சார்பில் அதன் நிறுவனர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் மலர்வளையம் வைத்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளும் இந்த நினைவு ஸ்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியின்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திறம்பட செயல்பட வேண்டுமானால் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பது நல்ல தீர்வாக இருக்கும். தற்போது உள்ள இரட்டை தலைமை அந்தக்கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கான தலைமையாக இருக்கலாம். ஆனால் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே திறமையாக செயல்பட முடியும். எனவே அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பதே நிரந்தர தீர்வாக அமையும்.

    தற்போது மத்திய அரசின் திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ள சூழ்நிலையில் அந்த திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கான திட்டத்தை நிறைவேற்றும் போது அதில் உள்ள குறைபாடுகளை எதிர்த்து போராடிய விவசாயிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அதன்பிறகு அந்த சட்டத்தை திரும்பப் பெற்று இருக்கக்கூடிய மத்திய அரசு தற்போது அக்னிபாத் திட்டத்திற்கு நிலவிவரும் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு உயிர் சேதம் ஏற்படும் முன் அந்த திட்டத்திற்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×