search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு இடைத்தேர்தல்- பிரசாரத்தை தீவிரப்படுத்துவது பற்றி தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை ஆலோசனை
    X

    ஈரோடு இடைத்தேர்தல்- பிரசாரத்தை தீவிரப்படுத்துவது பற்றி தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை ஆலோசனை

    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோடு பிளாட்டினம் மஹாலில் நாளை மாலை நடக்கிறது.
    • கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்குகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்ற தி.மு.க. சார்பில் 11 அமைச்சர்கள் உள்பட 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் கடந்த 1 வாரமாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எதிர்க்கட்சி வேட்பாளர்களை விட சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முனைப்போடு தி.மு.க.வினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்கள் அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோடு பிளாட்டினம் மஹாலில் நாளை (1-ந்தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்குகிறார். மாநகர மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம் வரவேற்கிறார். எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் தி.மு.க. முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொஹிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான், மக்கள் நீதி மய்யம் தேர்தல் பொறுப்பாளர் அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும், 3-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்வது குறித்தும், தலைவர்கள் பிரசாரம் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது.

    முடிவில் மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறுகிறார்.

    Next Story
    ×