என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொடக்குறிச்சியில் தி.மு.க-பா.ஜனதா மோதல்: பேரூராட்சி பெண் தலைவர் உள்பட 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

    • மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தி.மு.க., பா.ஜனதாவினர் புகார் அளித்தனர்.
    • காயம் அடைந்த 4 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.வில் 11 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வில் 1 கவுன்சிலரும், பா.ஜனதாவை சேர்ந்த 2 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலரும் உள்ளனர்.

    இந்த பேரூராட்சியின் தலைவராக மொடக்குறிச்சி பேரூர் தி.மு.க. செயலாளர் சரவணனின் மனைவி செல்வாம்பாள் சரவணன் உள்ளார். இந்த நிலையில் மொடக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக பா.ஜனதா சார்பில் மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சுந்தரம் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். மேலும் பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணனும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதை அகற்ற வேண்டும் என புகார் செய்தார்.

    இதையடுத்து மொடக்குறிச்சி போலீசார் பிரச்சினைக்குரிய போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதுபற்றி தெரியவந்ததும் பா.ஜனதா பெண் கவுன்சிலர் சத்யாதேவியின் கணவரும், பா.ஜனதா மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவருமான சிவசங்கர் என்பவர் போஸ்டர் அகற்றும் இடத்துக்கு சென்றார். அவர் போஸ்டர் அகற்றிய தூய்மை பணியாளர்களிடம் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் போஸ்டரை ஏன் அகற்றுகிறீர்கள் என்றும் கேட்டுள்ளார்.

    இதுபற்றி தெரியவந்ததும் பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இரு தரப்பினரும் திடீரென மோதிக்கொண்டனர். இதில் மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன் அவரது கணவரும் பேரூராட்சி தி.மு.க. செயலாளருமான சரவணன், 5-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் மகன்யா மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த சிவசங்கர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இதுபற்றி தெரியவந்ததும் ஏராளமான தி.மு.க., பா.ஜனதா தொண்டர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இந்த மோதல் சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தி.மு.க., பா.ஜனதாவினர் புகார் அளித்தனர். பின்னர் காயம் அடைந்த 4 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மோதல் சம்பவம் பற்றி தெரிய வந்ததும் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குணசேகரன், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிர்வேல், தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் வேதானந்தம், கரூர் மாவட்ட பொருப்பாளரும், ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் தலைவருமான சிவசுப்பிரமணியன் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மொடக்குறிச்சி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் இருதரப்பினர் கொடுத்த புகார் மீதும் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க., பா.ஜனதாவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து மொடக்குறிச்சி பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×