search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 3 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை
    X

    மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 3 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை

    • கடலோர பகுதிகளில் சீருடை அணியாத போலீசார் இரவு, பகலாக சுற்றி வந்து தீவிர கண்காணிப்பு பணியை கவனித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி தி.மு.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    மதுரை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் தி.மு.க., அதற்கான பணிகளையும் தொடங்கி விட்டது. அதன்படி கடந்த மாதம் திருச்சியில் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அடுத்த கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெறும் என்றும் அப்போது அவர் அறிவித்தார். அதன்படி வாக்குச்சாவடி முகவர்களுக்கான இரண்டாவது பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 17-ந்தேதி ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது.

    இதற்காக 3 நாள் பயணமாக நாளை மாலை மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். நாளை மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் வருகை தருகிறார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் சார்பில் உற்காக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதையடுத்து மதுரை முனிச்சாலையில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜனின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இரவு மதுரையில் உள்ள ஓட்டலில் தங்கும் அவர் மறுநாள் (17-ந்தேதி) காலை மதுரையில் இருந்து கார் மூலம் ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறார்.

    பிற்பகலில் ராமநாதபுரத்தை அடுத்த பேராவூரில் ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தேனி வடக்கு, தெற்கு, விருதுநகர் வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்தி, தென்காசி வடக்கு, தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு ஆகிய கட்சி சார்ந்த மாவட்டங்களை சேர்ந்த தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.

    பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் செல்லும் அவர் இரவில் அங்கு தங்குகிறார். 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் கலோனியர் பங்களாவில் நடைபெறும் மீனவர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு, மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் இலங்கை கடற்படையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள், மீன்பிடி தடை காலத்தில் அவர்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் மதுரை வரும் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் செல்லும் வழியில் மு.க.ஸ்டாலினுக்கு 54 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    மாவட்டம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடலோர பகுதிகளில் சீருடை அணியாத போலீசார் இரவு, பகலாக சுற்றி வந்து தீவிர கண்காணிப்பு பணியை கவனித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி தி.மு.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர். பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைத்து மாவட்டமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

    Next Story
    ×