search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    175 இடங்களில் சாலைகள் பாதிப்பு- சிவ்தாஸ் மீனா
    X

    175 இடங்களில் சாலைகள் பாதிப்பு- சிவ்தாஸ் மீனா

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • வெள்ளத்தால் 750 நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி பாளை சீவலப்பேரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த உரை கிணறுகள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

    பின்னர் சிவந்தி பட்டியில் உள்ள நெடுஞ் சான்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானதால் அதனையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, வேளாண்துறை, நீர்வளத் துறை என அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் ஒன்றிணைந்து சீரமைப்பு பணிகளில் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    சீவலப்பேரி பகுதியில் ஆய்வு செய்த பின்னர் தற்போது சிவந்திபட்டியில் குளம் உடைந்த பகுதியை ஆய்வு செய்துள்ளேன்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 750 நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 328 உடைப்புகள் இதுவரை சரி செய்யப்பட்டுள்ளன.


    மீதமுள்ள குளங்களில் உடைப்புகளை அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவந்திப்பட்டியில் ஏற்பட்டுள்ள குளம் உடைப்பு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குளங்கள் அடைக்கப்பட்டு சரி செய்யப்படும். நீர்வளத் துறை மூலமாக மீண்டும் இந்த குளங்களுக்கு அந்தந்த அணைகள் மூலமாக தண்ணீர் நிரப்பி விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்யப்படும்.

    சாலைகளை பொறுத்த வரை இரண்டு மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 175 இடங்களில் சாலைகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 150 இடங்களில் சாலைகள் சரி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு பொது போக்குவரத்தை தொடங்கி உள்ளோம். அதன் பின்னர் சாலைகளை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நடைபெறும்.

    அதேபோல் மின்சார இணைப்புகளை பொருத்த வரை நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்று 2 இடங்களில் மட்டும் வெள்ளம் வடியாமல் இருப்பது உள்ளிட்ட சில காரணங்களால் மின்விநியோகம் கொடுக்க முடியாமல் உள்ளது.

    இதுபோல் தூத்துக்குடி பகுதியிலும் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்விநியோகம் வழங்கப்பட வேண்டி உள்ளது. ஏரலில் இரவு முழுவதும் மின்சாரத்துறை உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரையிலும் அனைவரும் ஒன்றிணைந்து இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு மின் வினியோகம் வழங்கி உள்ளனர்.

    இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், கால்நடை துறை உள்ளிட்டவையும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்த வரை தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் 2 மாவட்டங்களிலும் உள்ள 101 கூட்டு குடிநீர் திட்டங்களில் 71 திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் 34 திட்டங்கள் சரி செய்யப்பட்டு விட்டது. இன்னும் 36 திட்டங்கள் சரி செய்யப்பட வேண்டி உள்ளது.

    வெள்ளத்தால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகளை பொறுத்தவரை இதுவரை நெல்லை மாவட்டத்தில் 13 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேரும் இறந்துள்ளனர். தொடர்ந்து வெள்ளத்தால் இறந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

    அதன் பின்னர் முழுமையான விவரம் தெரியவரும். இது தவிர நெற்பயிர்கள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்தது தொடர்பான கணக்கெடுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறு வணிகர்கள், தொழிற்சாலை உள்ளிட்டவர்களின் பாதிப்புகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் பின்னர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து அரசு உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கும். இது போன்ற வணிகர்கள் மற்றும் தொழிற் சாலை நிறுவனங்களுக்கு அரசு நேரடியாக உதவுவதை தவிர வங்கிகள் மூலமாகவும், காப்பீடு திட்டங்கள் மூலமாகவும் உதவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த கால கட்டங்களில் கேரளாவுக்கு நிவாரண பணிகளுக்காக தமிழகத்தில் இருந்து அதிக உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தற்போது கேரளாவில் இருந்து நீர்வளத்துறைக்கு டெக்னிக்கல் குழு இங்கு வந்துள்ளது. அவர்கள் குடிநீர் சப்ளை பணிகளுக்கு தேவையான அனைத்து சீரமைப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×