என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாக்டர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.
- மு.க.ஸ்டாலினை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து கவனித்துக்கொள்கிறார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அன்றைய தினம் காலையில் அவருக்கு லேசான உடல் சோர்வு ஏற்பட்டது.
இருப்பினும் அவர் சென்னை புறநகர் பகுதியான செம்மஞ்சேரி பகுதியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டதுடன் மாமல்லபுரம் சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
அன்றைய தினம் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அவருக்கு இருமல், சளித் தொல்லை அதிகமானது. இதனால் அவர் கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார்.
உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதியில் இருந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மாத்திரை சாப்பிட்டு வந்தார். அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு எந்த அளவு உள்ளது என்பதை கண்டறிய முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேற்று மதியம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக சென்றார்.
பரிசோதனையில் அவரது நுரையீரலில் 10 சதவீதம் சளி பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் டாக்டர்கள் கண்காணிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று எடுத்து சொல்லப்பட்டது. இதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தது.
இதில் அவரது உடல் நிலை ஓரளவு தேறி உள்ளது. இருந்தாலும் இன்னும் ஒரு நாள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றால் பூரணமாக குணம் அடைந்து விடலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாக்டர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.
மு.க.ஸ்டாலினை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து கவனித்துக்கொள்கிறார். மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர். மற்றபடி அங்கு பார்வையாளர்கள், கட்சிக்காரர்கள் யாருக்கும் அனுமதி இல்லை.
போலீஸ் உயர் அதகாரிகள், முதலமைச்சரின் செயலாளர்கள் அலுவலக ஊழியர்கள் ஆஸ்பத்திரியின் கீழ்தளத்தில் அமர்ந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு அவ்வப்போது டாக்டர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.