என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் பா.ஜ.க. அலுவலகத்தில் பரபரப்பு- அனுமதியின்றி வைக்கப்பட்ட பாரதமாதா சிலை அகற்றம்
    X

    விருதுநகர் பா.ஜ.க. அலுவலகத்தில் பரபரப்பு- அனுமதியின்றி வைக்கப்பட்ட பாரதமாதா சிலை அகற்றம்

    • அண்ணாமலையை வரவேற்கும் விதமாக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட பாரதமாதா சிலை அகற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • விருதுநகருக்கு வருகை தரும் மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் புகார் அளிப்பதோடு, அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.

    விருதுநகர்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் மாபெரும் நடைபயணத்தை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்துள்ள அவர் நாளை முதல் விருதுநகர் மாவட்டத்தில் தொடங்க இருக்கிறார்.

    இதற்கிடையே அவரை வரவேற்கும் விதமாக விருதுநகரில் விருதுநகர்- சாத்தூர் சாலையில் உள்ள கிழக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் சுமார் 5 அடி உயரத்தில் பாரதமாதா சிலை ஒன்று வைக்கப்பட்டது. இதற்காக அலுவலக வளாகத்திற்குள் பீடம் அமைத்து அதில் சிலை நிறுவப்பட்டது.

    இந்த சிலையை நாளை விருதுநகரில் நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரெங்கன் செய்திருந்தார். இந்த நிலையில் அந்த சிலை பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது.

    எந்தவித அனுமதியும் பெறாமல் சிலை வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த போலீசார் உடனடியாக அதனை அப்புறப்படுத்துமாறு கூறினர். ஆனால் பா.ஜ.க.வினர் மறுப்பு தெரிவித்ததால் நேற்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில், தாசில்தார் பாஸ்கரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த பா.ஜ.க.வினர், இங்கு வைக்கப்பட்டுள்ளது அரசியல் தலைவர்களின் சிலை அல்ல, பாரதமாதாவின் சிலை. மேலும் இந்த சிலை பொது இடத்தில் வைக்கப்படவில்லை, தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் மீண்டும் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் வந்த அருப்புக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கருண் கார்க் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்தவர்களிடம் கதவை திறக்குமாறு கூறினர்.

    ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து பின்பக்கமாக சுவர் ஏறிக்குதித்த போலீசார் கடப்பாறையால் பீடத்தை உடைத்து அதன் மீது அனுமதியின்றி வைத்திருந்த பாரதமாதாவின் சிலையை அகற்றினர். பின்னர் அதனை மூட்டையாக கட்டி அங்கிருந்து பாதுகாப்புடன் எடுத்து சென்றனர்.

    இன்று காலை அங்கு வந்த பா.ஜ.க. தொண்டர்கள், பாரதமாதா சிலை அகற்றப்பட்டத்தை கண்டு அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்தனர். மேலும் இதுதொடர்பாக கட்சியின் மேலிடத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை விருதுநகருக்கு வருகை தரும் மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் புகார் அளிப்பதோடு, அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.

    அண்ணாமலையை வரவேற்கும் விதமாக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட பாரதமாதா சிலை அகற்றப்பட்டது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×