search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிப்பர் லாரி-வேன் நேருக்கு நேர் மோதல்: குழந்தை உட்பட 2 பெண்கள் பலி
    X

    டிப்பர் லாரி-வேன் நேருக்கு நேர் மோதல்: குழந்தை உட்பட 2 பெண்கள் பலி

    • வேனில் டிரைவர் உள்பட 18 பேர் இருந்தனர்.
    • தவறான பாதையில் வந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    உத்தரபிரதேச மாநிலம் சாரன்பூர் மாவட்டம் ரஹ்நாத் மந்திர் பகுதியை சேர்ந்தவர் அமித். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என சுமார் 17 பேருடன் ஆன்மீக சுற்றுலாவாக தமிழகத்திற்கு வந்தார்.

    இதற்காக உத்தர பிரதேசத்தில் இருந்து ரெயில் மூலமாக கடந்த 27-ந்தேதி புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு வந்தடைந்தனர். அங்கு தங்கியிருந்து சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு அங்கிருந்து கன்னியாகுமரிக்கு செல்வதற்காக திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து 17 பேரும் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு நேற்று நள்ளிரவு புறப்பட்டுள்ளனர்.

    இன்று அதிகாலையில் கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டால் சூரிய உதயத்தை பார்த்துவிடலாம் என்று எண்ணிய அவர்கள் நேற்று நள்ளிரவே வேனில் புறப்பட்டு தூத்துக்குடி வழியாக நெல்லையை நோக்கி நான்குவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டை அடுத்த கீழ வல்லநாடு துணை மின் நிலையம் எதிரே வேன் வந்து கொண்டிருந்தது. வேனில் டிரைவர் உள்பட 18 பேர் இருந்தனர்.

    அப்போது எதிரே தவறான பாதையில் டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அந்த பகுதியில் வந்த வேனும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியது. கண்ணி மைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. லாரியின் முன்பக்க கண்ணாடியும் நொறுங்கியது. தொடர்ந்து 2 வாகனங்களும் மோதிய வேகத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன.


    இதில் வேனின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த அமித் மனைவி சுமன்(வயது 32), உறவினர் பெண் பார்வதி(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற அனைவரும் படுகாயமடைந்து அலறித் துடித்தனர். இதனை அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து வந்து பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த வேனில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்க முயன்றனர்.

    ஆனால் வேனின் கண்ணாடிகள் முழுவதும் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. தொடர்ந்து கிரேன் வர வழைக்கப்பட்டு வேனை சாலைக்கு மீட்டு கொண்டு வந்தனர். அதன்பின்னர் வேனின் கண்ணாடிகளை உடைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியில் ஸ்ரீ என்ற 1 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. தொடர்ந்து வேன் டிரைவர் உள்பட 15 பேருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை மருத்துவ மனை டீன் ரேவதி நேரில் பார்வையிட்டார்.

    இந்த விபத்து தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தவறான பாதையில் வந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×