search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருப்புக்கோட்டையில் ஜாமீனில் வெளியே வந்த 2 பேர் சரமாரி வெட்டிக்கொலை
    X

    அருப்புக்கோட்டையில் ஜாமீனில் வெளியே வந்த 2 பேர் சரமாரி வெட்டிக்கொலை

    • தொடர்ந்து சபரியின் செல்போன் சிக்னல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • செல்போன் சிக்னல் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே பி.தொட்டியாங்குளம் பகுதியில் இருப்பதாக தெரியவந்தது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உடையனம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது சகோதரர் சபரி (வயது 34), உறவினர் ரத்தினவேல் பாண்டியன் (32).

    இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. செல்போன் அழைப்பையும் ஏற்கவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது குடும்பத்தினர் அருப்புக்கோட்டை நகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து சபரியின் செல்போன் சிக்னல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது செல்போன் சிக்னல் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே பி.தொட்டியாங்குளம் பகுதியில் இருப்பதாக தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடினர். அப்போது சர்வீஸ் சாலை கிழக்கு பகுதியில் உள்ள முனியப்பசுவாமி கோவில் அருகே சபரி, ரத்தினவேல் பாண்டியன் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடல்களில் சரமாரி வெட்டுக்காயங்கள் இருந்தன.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன், அருப்புக்கோட்டை நகர் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சோபியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அருப்புக்கோட்டையில் நடந்த இரட்டை கொலை சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    திருச்சுழி அருகே உள்ள உடையனம்பட்டியை சேர்ந்தவர் ராக்கம்மாள். தி.மு.க மகளிர் அணி துணை செயலாளராக இருந்த இவர் தனது அக்காள் மகள் சோலைமணி என்பவரை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.

    சோலைமணிக்கும், அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் சில மாதங்களிலேயே சோலைமணி கணவரை பிரிந்து ராக்கம்மாள் வீட்டுக்கு வந்து விட்டார். மூர்த்தி பலமுறை மனைவியை சமரசம் செய்ய முயன்றும் பலனில்லை. மனைவி பிரிந்து சென்றதற்கு ராக்கம்மாள் தான் காரணம் என கருதிய மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த மார்ச் மாதம் ராக்கம்மாள் படுகொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக அருப்புக்கோட்டை நகர் போலீசார் விசாரணை நடத்தி சோலைமணியின் கணவர் மூர்த்தி, அவரது பெற்றோர், சகோதரர் சபரி, உறவினர் ரத்தினவேல் பாண்டியன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மூர்த்தி, சபரி, ரத்தினவேல் பாண்டியன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு 3 பேரும் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். இந்த நிலையில் நேற்று சபரியும், ரத்தினவேல் பாண்டியனும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    தி.மு.க. பெண் நிர்வாகி கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த இரட்டை கொலைகள் நடந்திருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    கொலையான சபரிக்கு மனைவியும், 1 குழந்தையும், ரத்தினவேல் பாண்டியனுக்கு மனைவியும் மற்றும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

    Next Story
    ×