search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கும் பயணத்தை தவிர்க்க வேண்டும்- ஆவடி போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
    X

    மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கும் பயணத்தை தவிர்க்க வேண்டும்- ஆவடி போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

    • பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும்.
    • சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஒரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டும்.

    திருநின்றவூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. 45 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு செல்வதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலை வழக்கமான உற்சாகத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர் களை பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் வரவேற்றனர்.

    ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகள் திறப்பையொட்டி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக சாலையை கடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது:-

    ஆவடி பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட முக்கிய பிரதான சாலைகள் மற்றும் இதர உட்புற சாலைகளில் 478 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன.

    பள்ளிகளில் இயங்கி வரும் வாகனங்களின் தற்போதைய இயக்கநிலை குறித்தும் வாகனங்களின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் செயல்பாடுகள், வேகக்கட்டுபாடு, அவசர வழி கதவுகள் ஆகியவைகள் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு பள்ளி நிறுவனங்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளின் அருகே காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும்.

    இதர உள் சாலைகளில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு அப்பள்ளிகளில் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.பி. மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தினர் மூலம் பள்ளி நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர போக்குவரத்தினை சீர்செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் தனியார் ஆட்டோக்கள், வேன்களின் ஓட்டுநர்களுக்கு பள்ளி மாணவ-மாணவி களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் சென்று வரவேண்டும் என்றும் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்த்தும், சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் மட்டும் சாலையை கடந்தும் பாதுகாப்பாக பள்ளி சென்று வர வேண்டும். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்றி சாலையின் ஒரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×