என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தே.மு.தி.க. செயலாளர் மற்றும் அவரது தாயை, சொத்து தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு அண்டக்குடியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சீனிவாசன் (வயது45), தே.மு.தி.க. ஊராட்சி செயலாளர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், உறவினருமான கணபதி (38) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்த வந்தது.
    இந்த நிலையில் சீனிவாசனின் வீட்டில் அவரது தாய் அங்காள ஈஸ்வரி (68) அமர்ந்திருந்தார். அப்போது கணபதி அங்கு வந்தார்.

    அவர் கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்தி ருந்த அரிவாளால் அங்காள ஈஸ்வரியை வெட்டினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். தொடர்ந்து அங்கிருந்து சென்ற கணபதி அருகில் நாடக மேடையில் படுத்திருந்த சீனிவாசனையும் வெட்டிக்கொலை செய்தார்.

    அதே ஊரை சேர்ந்த தமிழழகன் (27) வீட்டிற்கு சென்ற கணபதி, அவரையும் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். தாய்-மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பபடுத்தியது. இது தொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், பங்காளிகளான சீனிவாசன், கணபதி இடையிலான சொத்து பிரச்சினை சமீபத்தில் சுமூகமாக தீர்க்கப்பட்ட நிலையில் இந்த இரட்டைக்கொலை நடந்துள்ளது ஏன் என்பது தெரியவில்லை என்றனர்.

    அதேபோல் தமிழழகன் ஏன் வெட்டப்பட்டார் என்பதும் தெரியவில்லை என்று அவர் கூறினர்.
    வீடு புகுந்து பணம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    சிவகங்கை:

    காரைக்குடி தாலுகா செட்டிநாடு அருகே உள்ள கொட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது72), சைக்கிள் கடை வைத்துள்ளார்.

    இவர் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபோது யாரோ மர்ம மனிதர்கள் வீட்டின் பின்புறம் வழியாக புகுந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.

    இது குறித்து செட்டிநாடு போலீசில் அருணாச்சலம் புகார் செய்தார். அதில் வீட்டில் இருந்த வெள்ளிப் பாத்திரங்கள், புடவைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொள்ளைபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.44 ஆயிரம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து செட்டிநாடு போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் அமுது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.

    பிள்ளையார்பட்டியில் அசோகன் தலைமையில் அ.தி.மு.க. கட்சியினர் நடை பயணமாக வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்பாளராக அசோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி அசோகன் தனது தேர்தல் பிரசாரத்தை பிள்ளையார்பட்டியில் இருந்து தொடங்கினார். முன்னதாக பிள்ளையார்பட்டி வந்த அ.தி.மு.க. வேட்பாளர் அசோகன் தலைமையிலான கட்சியினர் கற்பக விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பிள்ளையார்பட்டி பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அசோகன் தலைமையில் கட்சியினர் நடை பயணமாக வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பிரசாரத்தில் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், நகரச் செயலாளர் இப்ராம்ஷா, பேரூராட்சி மன்றத் தலைவர் சோமசுந்தரம், ஒன்றியத் துணைச் செயலாளர் முருகேசன், ஒன்றிய துணைத் தலைவர் பத்மநாதன், சிதம்பரம், நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், முருகானந்தம் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
    மானாமதுரை ஆனந்தவள்ளி அம்மன்-சோமநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    மானாமதுரை:

    மானாமதுரை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆனந்தவள்ளி அம்மன்- சோமநாதர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மதுரையில் நடப்பது போல் மானாமதுரையிலும் சித்திரைத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா நேற்று ஆனந்தவள்ளி அம்மன்-சோமநாதர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கோவிலில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் தற்காலிக கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. ஆனந்தவள்ளி அம்மன்- சோமநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்பாளும் கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர். பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கற்பூர பட்டர் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து கொடியேற்றி வைத்தார்.

    திருக்கல்யாணம் சித்திரைத் திருவிழாவையொட்டி சுவாமியும், அம்பாளும் தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். தினசரி பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 

    19-ந்தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாணமும், 20-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 22-ந்தேதி வீரஅழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.
    தேவகோட்டையில் பந்தல் காண்டிராக்டர் வீட்டில் பூட்டை உடைத்து 97 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கைலாச நாதபுரம் பெரியகருப்பன் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் (வயது64), பந்தல் காண்டிராக்டர். தமிழ்நாடு பந்தல் தொழிலாளர் சங்க தலைவராகவும் உள்ளார்.

    சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் பஞ்ச நாதனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்து பஞ்சநாதனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது யாரோ ‘மர்ம’ நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 5 பீரோக்களையும் உடைத்து 97 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    தேவகோட்டை டி.எஸ்.பி. கருப்பசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும், தடயங்களை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    பஞ்சநாதனின் வீட்டுக்கு செல்லும் வழியில் பழைய சருகனி ரோட்டில் உள்ள ஒரு நகரத்தார் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அங்கு நகைகள் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    இதேபோல் 5 தினங்களுக்கு முன்பு தேவகோட்டை டவுன் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் 29 பவுன் நகை திருடு போனது குறிப்பிடத்தக்கது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தேர்தல் விதிமீறி சுவர் விளம்பரம் செய்ததாக அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் காவல் நிலையம் எதிரே சுவற்றில் அனுமதி இல்லாமல் விளம்பரம் செய்ததாக தி.மு.க. நகர செயலாளர் யாகூப் மீதும் மற்றும் காளாப்பூர் பெரியபாலம் அருகே அனுமதி இல்லாமல் சுவற்றில் விளம்பரம் செய்ததாக அ.தி.மு.க. கிளை செயலாளர் ராமநாதன் மீதும், வடசிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் இருவர் மீது சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதேபோல் சிங்கம்புணரி அருகே புதுப்பட்டி நியாய விலைக்கடை சுவற்றில் அனுமதி இல்லாமல் விளம்பரம் செய்ததாக திராவிடர் கழக மண்டல இளைஞரணி செயலாளர் ராஜாராம் மீது காளாப்பூர் கிராம நிர்வாக அலுவலர் சேகர் அளித்த புகாரின்பேரில் எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தனியார் பஸ் நிறுவன மேலாளர் பரிதாபமாக இறந்தார்.

    மானாமதுரை:

    மானாமதுரை அருகே உள்ள அன்னியேந்தலை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது54). இவர் மதுரையில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    நேற்று அலுவலக பணிகளை முடித்துவிட்டு ஆறுமுகம் ஊருக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளில் அவர் சென்றார். மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அன்னியேந்தல் கிராமம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாகன சோதனையின் போது வியாபாரியிடம் ரூ.98 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை– மதுரை சாலையில் தேர்தல் பறக்கும்படை தாசில்தார் கருப்பையா தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த சோதனையை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து வந்த ஒரு வேனை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். அதில் தர்மபுரியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் வந்தார். வெள்ளைப் பூசணிக்காய் வியாபாரியான இவர், ராமநாதபுரத்தில் பூச்சணிக்காய் இறக்கி வருவதாக தெரிவித்தார்.

    அவரிடம் ரூ,98 ஆயிரம் இருப்பதாக பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர். அது, காய்கள் விற்றதற்கான வசூல் தொகை என ஜெயப்பிரகாஷ் கூறியபோதும், அதற்கு முறையான ஆவணங்கள் இல்லை என கூறி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடையால் மானாமதுரை பகுதியில் கட்டுமான தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று பகுதியில் கட்டுமான தொழிலுக்காக மாட்டு வண்டிகளில் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை வைகை ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது மணல் அள்ள தடை விதிக்கப்பட்டதால் மாட்டு வண்டி கூலி தொழிலாளர்கள் பெரிதும் அவதிபட்டு வருகின்றனர். மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டதால் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சிறிய வீடுகள் கட்ட, வீடு மற்றும் கட்டிடங்கள் மராமத்து பணிகளுக்கு மணல் கொண்டு வர முடியாமல் பணிகள் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது.

    மானாமதுரையில் உள்ள மாட்டு வண்டி கூலி தொழிலாளர் சங்கம சார்பில் மானாமதுரை தாசில்தாரிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:–

    மாட்டு வண்டி தொழிலை நம்பி 30 குடும்பங்கள் தற்போது வேலையின்றி அவதிபட்டு வருகிறோம். கட்டுமான தொழில் பாதிப்படையாமலும் எங்கள் வாழ்வாதாரம் பாதிப்படையாமலும் இருக்க வைகை ஆற்றில் அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மாட்டு வண்டிகளில் குறிப்பிட்ட அளவு மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்.

    பிற மாவட்டங்களில அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி உள்ளது. கட்டுமான தொழில் தடையின்றி நடைபெற மாட்டு வண்டிகளில் மணல் அள்ள விதிக்கப்பட்ட தடை நீக்கி அனுமதித்தர வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    காரைக்குடி அருகே உள்ள கிட் அன்ட் கிம் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 234 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள கிட் அன்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    கல்லூரியின் தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    கல்லூரியின் இயக்குநர் அண்ணாமலை சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து ஆண்டறிக்கை வாசித்தார். கோவை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:–

    மாணவர்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் ஒரு நிமிடம் ஒதுக்கி உங்கள் குறிக்கோளை பற்றி சிந்தியுங்கள், அப்படி சிந்தித்தால் உறுதியாக உங்கள் குறிக்கோளில் வெற்றியடைய முடியும்.

    பட்டம் பெறுவது மட்டுமே வெற்றியின் முடிவல்ல. அதன்பின்னும் நாம் கற்ற கல்வியில் சாதனைகளை நிகழ்த்த வேண்டிய கடமையுள்ளது அதனை செயலாற்றுவது தான் முழுமயான வெற்றி. “நீயே திறமைசாலி, உன்னால் மட்டுமே முடியும்” என்ற தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும், அதற்கு கனவு காண வேண்டும, அந்த கனவு வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும், அந்த முயற்சிக்கான பணியில் ஒழுக்கம், ஈடுபாடு மற்றும் இடைவிடாத பயிற்சி ஆகியவை மிகவும் முக்கியமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பு விருந்தினருடன் தலைவர் அய்யப்பன் இணைந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியில் சிவில் துறையில் 4–வது இடம் பெற்ற பாண்டி, முதுகலை அமைப்பியல் துறையில் 47–வது இடம் பெற்ற முத்துகுமரன் மற்றும் மேலாண்மை துறையில் 49–வது இடம் பெற்ற மாணவி வசந்தி ஆகியோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தவிர 234 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

    விழாவில் கிட் அன்ட் கிம் பொறியியல் கல்லூரி முதல்வர் வரதவிஜயன், அழகப்பா மேலாண்மை கல்லூரி, இயக்குநர் கலியமூர்த்தி மற்றும் அறங்காவலர்கள், பேராசியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள கலந்து கொண்டனர்.
    கருணாநிதியை விமர்சித்து பேசிய வைகோவை கண்டித்து தி.மு.க. சார்பில் அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சிவகங்கை:

    தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை விமர்சித்து பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை கண்டித்து சிவகங்கை நகர் தி.மு.க. சார்பில் அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் துரைஆனந்த் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் அயூப்கான், மாவட்ட பிரதிநிதி ஜெயகாந்தன், நகர துணைச் செயலாளர்கள் விஜியகுமார், சரவணன், நாகராஜன், வக்கீல் சூர்யநாராயணன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் தி.மு.க.வினர் வைகோவின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பினை தெரிவித்தனர்.
    சிவகங்கை அருகே வாலிபரை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த திருமண்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 31). சம்பவத்தன்று  இவர் சிவகங்கை சுண்ணாம்பு காளவாசல் அருகே  நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.

    இது குறித்த புகாரின் பேரில், சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் விசாரணை நடத்தி சிவகங்கையை அடுத்த பெரியகோட்டையைச் சேர்ந்த பாலசந்தர் (வயது 24), மாரநாடு கிராமத்தைச் சேர்ந்த மலைராஜ் (48), சிவசக்தி (27), பாலகிருஷ்ணன் (50) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.
    ×