என் மலர்
சிவகங்கை
தேவகோட்டை:
தேவகோட்டை அண்ணா அரங்கில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சட்டமன்ற உறுப்பினர்களாக யாரிடமும் நாங்கள் பணம் வாங்காமல் ஏழை, எளிய மக்களை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளோம். எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் துரோகிகளை மன்னிக்கவே கூடாது. தமிழகத்தில் தான் கடமையை செய்வதற்காக லஞ்சம் பெறப்படுகிறது.
அம்மா என்ற பட்டத்தை யார் கொடுத்தது. தேர்தல் நேரத்தில் மட்டும் எம்.ஜி.ஆர்.படத்தை போடுகின்றனர். அம்மா குடிநீர், அம்மா உணவகம் என எதற்கு எடுத்தாலும் அம்மா பெயரை பயன்படுத்துகிறார். எம்.ஜி.ஆர். மீது உண்மையான அன்பு இருந்தால் ஏன் அவர் பெயரை பயன்படுத்த வில்லை. எம்.ஜி.ஆர். கொடுத்தது தான் இரட்டை இலை. இந்த இரட்டை இலையை எடுத்து விட்டு சேவல் சின்னத்தில் நின்று பாருங்கள், நீங்கள் வெற்றி பெருவீர்களா என்று.
அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் நடக்கிற போட்டி இது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் அது அதர்மம். மக்களுக்காக நான் என்கிறார் ஜெயலலிதா. அவருக்கு வயிற்றுப்பசி என்பது தெரியுமா? வயிற்றுப்பசியைப் பற்றி எனக்கு தெரியும்.
பல ஆயிரம் கோடி ஊழல் செய்து பணபலத்தை வைத்துள்ளனர். ஆனால் எங்களிடம் மக்கள் பலம் மட்டுமே உள்ளது. இந்த 6 பேர் கூட்டணி ஆறுமுகம், ஏறுமுகமாகிறது. பதவி ஆசையால் 93 வயதில் கருணாநிதி ஊரைச் சுற்றி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேவகோட்டை:
ராமேசுவரத்தை சேர்ந்தவர் அமலராஜ். இவரது மகன் நியூமேன் (வயது 21). இவர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் நியூமேன் தனது நண்பர்கள் பாலமுருகன், பாண்டிய ராஜ் ஆகியோருடன் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி குளத்தில் குளிக்க சென்றார்.
3 பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதியில் நியூமேன் சிக்கினார். அவரால் நீச்சல் அடித்து வர முடியவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்கி நியூமேன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆராவயல் போலீசார் தேவகோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 3 மணி நேரம் குளத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டு நியூமேன் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆராவயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினத்தைச் சேர்ந்தவர் கோபி (வயது39). இவர் தனது குடும்பத்துடன் ராமேசுவரம் செல்ல காரில் புறப்பட்டார். குழந்தைகள் உள்பட 13 பேர் காரில் இருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் காரைக்குடி அருகே திருச்சி–ராமேசுவரம் சாலையில் கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த கோபியின் தாய் ராஜம்மாள் (55) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து செட்டிநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் சிவம் (வயது55), சித்த மருத்துவர். இவருக்கு 2 மனைவிகளும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக தேவகோட்டை ஒத்தக்கடை பகுதியில் சிவம் சொந்தமாக கிளீனிக் நடத்தி வந்தார்.
நேற்று மாலை வீட்டில் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சிவம் புறப்பட்டார். மொபட்டில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்ப வில்லை.
இந்த நிலையில் ஆராவயல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில் அருகே ரத்த காயங்களுடன் சிவம் பிணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஆராவயல் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது வாகனம் மோதிய விபத்தில் அவர் பலியாகி இருப்பது தெரிய வந்தது.
அவர் மீது மோதிய வாகனம் எது என்பது குறித்த ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழர்களை காப்பற்ற திராவிட கட்சிகள் தவறி விட்டன. தமிழினத்தை காக்கும் கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் மூடப்படும் என்றார் ஏனென்றால் திறந்தது அவர்தான் அதனால் சாவி அவரிடம் தான் இருக்கும் எனவே அவ்வாறு கூறினார்.
தமிழர்களை அ.தி.மு.க தலை நிமிரச் செய்யும் என ஜெயலலிதா கூறினார் முதலில் உங்கள் அமைச்சர்களை தலை நிமிரச் செய்யுங்கள். அதற்கு பிறகு தமிழர்களை தலை நிமிரச் செய்வதை பற்றி நீங்கள் பேசலாம். திராவிட முன்னேற்றம் என்பது திருடர்களின் முன்னேற்றம் தானே தவிர தமிழர்களுக்கு முன்னேற்றம் கிடையாது மீண்டும் இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை காப்பாற்ற யாராலும் முடியாது.
மக்கள் நினைத்தால் திராவிட கட்சிகள் தீக்குட்சிகளாக கூட இருக்கமுடியாது. மாற்றம் என்பது தாத்தா பாட்டியில் இருந்து வருவது இல்லை அடுத்த தலைமுறையில் இருந்து வருவது. கலைஞர் கடைசி தேர்தல் என 1996ல் இருந்து சொல்கிறார். இதுவரை சொன்னதை செய்ததே இல்லை. அதிகாரம் மிக வலிமையானது என்றார் அண்ணல் அம்பேத்கர். அந்த அதிகாரத்தை மக்களாகிய உங்களுக்கே நாங்கள் பெற்று தருகிறோம். நாம் தலை நிமிர இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களியுங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.
காளையார்கோவில் தென்றல் நகரைச் சேர்ந்தவர் அந்தரைய்யா. இவரது மனைவி சாந்தி (வயது 49). அந்தரைய்யா மற்றும் அவரது மகன் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதனால் சாந்தி மட்டும் தனியாக தென்றல் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் அவர் நேற்றுமுன்தினம் இரவு தனது கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயின், செல்போன் ஆகியவற்றை தனது படுக்கைக்கு அருகில் உள்ள மேஜையில் வைத்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டினுள் நுழைந்த மர்மநபர் அவற்றை திருடிக் கொண்டு சென்றுவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கையில் இருந்து சிங்கம்புணரிக்கு இன்று காலை டாடா சுமோ கார் ஒன்று சென்றது. காரை குமார் என்பவர் ஓட்டி சென்றார்.
சிவகங்கை அம்பேத்கார் சிலை அருகே தேர்தல் நிலைக்குழு தாசில்தார் கருப்பையா தலைமையில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரில் ரூ.80 ஆயிரம் இருந்தது. டிரைவர் குமாரிடம் பணம் கொண்டு செல்ல ஆவணங்கள் உள்ளதா? என கேட்டனர். அதற்கு அவர் இல்லை என்றார். இதனை தொடர்ந்து ரூ.80 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை :
சிவகங்கை நகர் கோகலே ஹால் ரோட்டில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவர் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. நேற்று முன்தினம் மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்குவதை பார்க்க குடும்பத்துடன் ராமச்சந்திரன் மதுரை வந்தார்.
இதனை அறிந்த 3மர்ம மனிதர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அவர்கள் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்துள்ளனர். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ராமச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டனர்.
அப்போது அவர் மதுரையில் இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கொள்ளையர்களை பிடிக்க திட்டமிட்டு சத்தம் எழுப்பினர்.
இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் பொதுமக்கள் திரண்டதால் 3 கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது ஒருவன் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்தபோது கால் முறிவு ஏற்பட்டு பொது மக்களிடம் சிக்கினான். அவனுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிவகங்கை நகர் போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவனது பெயர் பாண்டி (வயது28) என்பதும், பரமக்குடியை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய 2 பேர் பெயர் தங்கராஜ், பாலாஜி என்றும், திருப்புவனத்தை சேர்ந்தவர் என்றும் பாண்டி தெரிவித்தான். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சரியான நேரத்தில் பொதுமக்கள் திரண்டு கொள்ளையர்களை பிடிக்க முயன்றதால் வீட்டிலிருந்த எந்த பொருட்களும் கொள்ளை போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லல்:
தேவகோட்டை அருகே உள்ள சின்னவெளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது48). இவரது உறவினர் முத்து (36). இருவருக்கும் இடையே சிறு, சிறு தகராறுகள் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இது குறித்து பொன்னம்மாள் ஊர் பெரியவர்களிடம் சென்று முறையிட்டார்.
அவர்கள் முத்துவிடம் இதுபற்றி கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த முத்து நேற்று இரவு பொன்னம்மாள் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டை தீ வைத்து கொளுத்தவிட்டு ஓடி விட்டார். மளமளவென்று தீப்பிடித்து கொண்டதில் வீட்டில் இருந்த 10 மூடை நெல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.
இது குறித்து பொன்னம்மாள் தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துவை தேடி வருகிறார்கள்.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி மானாமதுரை தொகுதியில் உள்ள ஏனாதி, பூவந்தி, மணலூர், பசியாபுரம், பொட்டப்பாளையம், சாயனாபுரம், கரிசல்குளம் உள்பட பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தும், மக்கள் அனைவரும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழியை வைத்தார். மக்கள் அதனை ஒப்புக் கொண்டனர்.
இவருடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், புதுவாழ்வு திட்ட அதிகாரி சரவணன், புருசோத்தமன், துணை தாசில்தார் சிவராமன், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ஜேசு, பூவந்தி இன்ஸ்பெக்டர் பாலாஜி, ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தமிழர்களின் உரிமைகளை பெற்று தரப்போகிற தேர்தல் ஆகும். தமிழக மக்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா பணத்துக்காகவும், இலவசத்துக்காகவும் கையேந்தவிட்டார். தமிழர்களாகிய நாமும் நமது பண்பாட்டை மறந்து அவரிடம் அடிமையாகி விட்டோம். ஜெயலலிதா அதிகளவில் மதுக்கடைகளை திறந்ததால் இதுவரை 2 லட்சம் தாய்மார்கள் விதவைகளாகி இருக்கிறார்கள். எனவே அ.தி. மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழகத்தில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தவர். ஆனால் தற்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயலாகும். எனவே தமிழகத்தில் அ.தி.மு.க–தி.மு.க. இல்லாத தமிழரின் ஆட்சி அமைய நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது55). விவசாயியான இவர், அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார்.
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பாண்டி (52) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று மாலையில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை கதிரேசனும், அவரது மனைவி கீதாவும் (49) வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வயல் பகுதியில் கணவன்–மனைவியை பாண்டி உள்பட 9 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டினார்கள். இதில் கதிரேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
காயம் அடைந்த கீதா சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கதிரேசனின் மகன் வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை சிப்காட் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த கொலையில் தொடர்புடைய பாண்டி, மாரி, விஜயா உள்ளிட்ட 9 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.






