என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை அருகே லாரிகள் மோதி ஏற்பட்ட விபத்தில் மதுரை டிரைவர் பலியானார்.
    சிவகங்கை:

    மதுரையில் இருந்து காளையார்கோவில் நோக்கி பெட்ரோல் டேங்கர் லாரி இன்று அதிகாலை சென்றது. மதுரையை சேர்ந்த கருப்பசாமி (வயது52) லாரியை ஓட்டி சென்றார்.

    சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன் கோட்டை பகுதியில் லாரி சென்றபோது எதிரே காளையார்கோவிலில் இருந்து டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். 2 லாரிகளிலும் வந்த காசி, ராமன், சரவணன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.

    விபத்து தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொன்ரகு, மோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுவிலக்கு அமல் என்று கூறியிருப்பது பெண்கள் மனதில் ஆழமாக பதிந்து வேரூன்றி உள்ளது. எனவே பெண்கள் மட்டுமே வாக்களித்தால் கூட தி.மு.க. கட்டாயம் ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் ப.சிதம்பரம் கூறினார்.
    காளையார்கோவில்:

    சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் மேப்பல் சத்தியநாதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடந்த பிரசார கூட்டங்களில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வினர் டாஸ்மாக் கடைகளை மூடினால் அரசுக்கு வருவாய் இழப்பு என்று கூறுகிறார்கள். அது தவறு. அந்த வருமானம் மற்ற கடைகளில் மக்கள் வாங்குகின்ற பொருட்களால் வருகின்ற வரியிலிருந்து அரசுக்கு வந்துவிடும். எனவே அரசுக்கு இழப்பு ஏற்படாது. மாறாக மிடாஸ் தொழிற்சாலை உரிமையாளருக்கு இழப்பு ஏற்படும்.

    தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம். மதுவிலக்கு அமல் என்று கூறியிருப்பது பெண்கள் மனதில் ஆழமாக பதிந்து வேரூன்றி உள்ளது. தமிழகத்தில் உள்ள பெண்கள் மட்டுமே வாக்களித்தால் கூட தி.மு.க. கட்டாயம் ஆட்சி அமைக்கும். ஆண்களும் சேர்ந்து வாக்களித்தால் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 3-ல், 2 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சிவகங்கையில் வீட்டை அடித்து நொறுக்கி தாக்கியதில் தாய், மகள் காயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட கணவன் உள்பட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் உள்ள வல்லணி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் முருகேசன் (வயது 32). இவரது மனைவி மகேஸ்வரி (27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன்– மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று செந்தில் முருகேசன் மற்றும் உறவினர்கள் வனரோஜா, ராஜா, முருகன், பாண்டி, மார்த்தாண்டன், நாகலட்சுமி, ராணி ஆகிய 8 பேரும் மகேஸ்வரி வசித்து வந்த வீட்டிற்கு சென்று அங்கிருந்த மகேஸ்வரியையும், இவரது தாயார் பஞ்சவர்ணத்தையும் தாக்கிவிட்டு வீட்டையும் அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. காயம் அடைந்த தாய், மகளை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து மகேஸ்வரி சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். சப்– இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து செந்தில்முருகேசன் உள்பட 8 பேரையும் தேடிவருகிறார்.

    இளையான்குடி அருகே உறவினர் வீட்டில் தங்கி இருந்த இளம்பெண், பணம், நகையுடன் மாயமானார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    சிவகங்கை:

    இளையான்குடி அருகே உள்ள அதிகரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 36). இவரது உறவுக்கார பெண் சங்கீதா (வயது17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாய் இறந்து விட்டதாலும், தந்தை வெளியூரில் வேலைபார்த்து வருவதாலும் ஜெயக்குமார் வீட்டில் சங்கீதா வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 21–ந்தேதியன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சங்கீதா வீடு திரும்பவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோது ரூ.20 ஆயிரம் ரொக்கம், 6 பவுன் நகையை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து இளையான்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடிவருகிறார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று சிவகங்கை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் சண்முக ராஜா கலையரங்கில் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் சிறப்பான வகையில் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். தமிழகத்தில் 6-வது முறையாக தி.மு.க. ஆட்சி கருணாநிதி தலைமையில் மலர வேண்டும் என்ற உணர்வுடன் உங்களை சந்திக்க நான் வந்துள்ளேன்.

    தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு சிக்கல் வந்தபோது அதற்கு என தனிச்சட்டம் கொண்டு வந்து அதனை நடத்த வழிவகை செய்தவர் கருணாநிதி.

    அதற்கு பின்னர் சிலர் உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றம் இதற்கென ஒரு குழு அமைத்தது. இந்த குழு இதுபற்றி விசாரிக்க தமிழகம் வந்தபோது அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

    அ.தி.மு.க. ஆட்சியில் தான் கருணாநிதி நடைமுறைப்படுத்திய எந்த சட்டத்தையும் பின்பற்றுவது கிடையாது. ஜல்லிக்கட்டுக்கும் அதே நடைமுறைதான். இதை பார்த்த அந்த குழு சாதகமற்ற அறிக்கையினை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டது.

    அதன்பின் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் 10.1.2015ல் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க மனு தாக்கல் செய்யப்படும் என்றார். ஆனால், எதையும் செய்யவில்லை. தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் முயற்சியில் ஈடுபடுவோம்.

    கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் கூறியதை நிறைவேற்றவில்லை. 2000 ஏக்கரில் ஐ.டி. பார்க், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாட்டில் மானாவரி பண்ணை, 19 ஏரிகள் தூர்வாரப்படும் என்றெல்லாம் சொன்னார். ஆனால் இவை எதையும் அவர் செய்யவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சிக்கு சரியான பாடம் புகட்ட நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையினை அப்படியே நகல் எடுத்து அ.தி.மு.க.வினர் வெளியிட்டுள்ளனர். தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் அவர்கள் வெளியிட வேறு ஒன்றும் கிடையாது. நீங்கள் செய்ததாக சொல்லும் அறிவிப்பை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு தான். அதுபோல் ஊழலைக் கட்டுப்படுத்த லோக் ஆயுக்தா கொண்டு வருவோம். 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிக்கை தந்த ஒரே கட்சி தி.மு.க.தான். விருத்தாச்சலம், சேலம் அ.தி.மு.க. கூட்டத்திற்கு வந்தவர்கள் இறந்துபோனார்கள். வெயிலில் மக்களை காக்க வைப்பவர் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க. மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்று நினைக்கும் கட்சி. இங்கு கூடி உள்ள கூட்டம் தானாக கூடியது. கூட்டப்பட்ட கூட்டம் இல்லை. நாட்டைக் காப்பாற்ற நம்மைக் காப்பாற்ற தமிழகத்தை காப்பாற்ற தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சாலைக்கிராமம் பகுதியில் மிளகாய், பருத்தி ஆகியவற்றிக்கு சேமிப்பு கிடங்கு அமைத்து கொடுப்பேன் என்று தி.மு.க. வேட்பாளர் சித்ரா செல்வி தெரிவித்தார்.
    மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சித்ராசெல்வி தலைமையில் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையொட்டி இளையான்குடி ஒன்றியம் குயவர்பாளையத்தில் இருந்து நேற்று வேட்பாளர் சித்ராசெல்வி பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அங்கிருந்து சாலைக்கிராமம், நடுவலசைக்காடு, வாணியக்குடி, பூலாங்குடி, முத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்தார்.

    பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:-

    இந்த பகுதியில் பருத்தி, மிளகாய் அதிகளவு விளைகிறது. போதிய அளவில் விளைச்சல் இருந்தாலும் அவற்றை பதப்படுத்தி வைக்க சேமிப்பு கிடங்கு வசதி இல்லை. நான் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் வேளாண் மையம் மூலம் மிளகாய், பருத்தி ஆகியவற்றை சேமிக்க கிட்டங்கி வசதி ஏற்படுத்தி கொடுப்பேன். மேலும், சேமிப்பு கிடங்கில் பொருட்கள் இருப்பிற்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க ஏற்பாடு செய்வேன்.

    தடையின்றி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சாலைக் கிராமத்தில் இருந்து சிவகங்கைக்கு போதிய பஸ் வசதி இல்லை. அரசு போக்குவரத்து கழகம் மூலம் கூடுதல் பஸ் வசதிகள் ஏற்படுத்தி தருவேன். இப்பகுதி மாணவ-மாணவிகள் கல்விக்காக இங்கு பொறியியல் கல்லூரி ஏற்படுத்துவேன்.

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., குரூப் 1 போன்ற உயர் பதவிகளுக்கு செல்ல இப்பகுதி மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி பெற தேவையான நடவடிக்கை எடுப்பேன். பிரசாரத்தின் போது வேட்பாளருடன் ஒன்றிய செயலாளர்கள் மதியரசன் (கிழக்கு), செல்வராஜ் (மேற்கு), தாயமங்கலம் ஊராட்சி கிளை செயலாளர் சத்தியேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    இளையான்குடி அ.தி. மு.க. நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருப்பவர் அழகுசுப்பு. இவர் குடும்பத்துடன் குமாரக்குறிச்சியில் வசித்து வருகிறார். மனைவி நாகரத்தினம் ஒப்பந்ததாரராகவும், மகன் ராஜேந்திரன் சென்னையில் போலீஸ் அதிகாரியாகவும், மகள் தனலட்சுமி இளையான்குடி யூனியன் தலைவராகவும் உள்ளனர்.

    மற்றொரு மகன்களான பாரதிரராஜன் இளையான்குடி நிலவள வங்கி தலைவராகவும், குலசேகரன் நீர்பாசனக்குழு தலைவராகவும் உள்ளனர்.

    இந்த நிலையில் 7 பேர் கொண்ட காரைக்குடி வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை குமாரக்குறிச்சியில் உள்ள அழகுசுப்புவின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அரைமணி நேரம் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    திருப்புத்தூர் அருகே உள்ள நூல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதால் பணியாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள உடையநாதபுரம் என்ற இடத்தில் ஒரு பஞ்சு நூல்ஆலை உள்ளது. இங்கு சுமார் 500 பணியாளர்கள் வேலை செய்வதாக கூறப்படுகிறது.

    இரண்டு கட்டிடங்களாக உள்ள இந்த ஆலையில் முதல் கட்டிடத்தில் பஞ்சு நூற்கும் வேலையும், இரண்டாவது கட்டிடத்தில் நூற்கப்பட்ட பஞ்சை நூலாக மாற்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

    நேற்று பணியில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இருக்கும் பொழுது அடியில் உள்ள கழிவு பஞ்சுகளில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த பணியாளர்கள் ஆலையை விட்டு வெளியே வந்து மில் மேலாளரிடம் தெரிவித்தனர். உடனே மேலாளர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    ஆய்வாளர் பாண்டியராஜன் தலைமையில் வந்து கழிவுகளில் ஏற்பட்டுள்ள புகை மூட்டைத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக திருப்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கல்லல் அருகே தாயுடன் சென்ற மாணவி திடீரென மாயமானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள ஆலங்குடியை சேர்ந்தவர் காந்தி (வயது 40). இவரது மகள் கோமளவல்லி (21). இவர் காரைக்குடி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. 3–ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கோமளவல்லி தனது தாய் காந்தியுடன் கடைக்கு சென்று உள்ளார்.

    அப்போது கோமளவல்லி திடீரென மாயமானார். இதனால் பதட்டமடைந்த காந்தி, தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் கல்லல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.
    ×