என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை நடத்துவோம்: சிவகங்கை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை நடத்துவோம்: சிவகங்கை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று சிவகங்கை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் சண்முக ராஜா கலையரங்கில் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் சிறப்பான வகையில் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். தமிழகத்தில் 6-வது முறையாக தி.மு.க. ஆட்சி கருணாநிதி தலைமையில் மலர வேண்டும் என்ற உணர்வுடன் உங்களை சந்திக்க நான் வந்துள்ளேன்.

    தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு சிக்கல் வந்தபோது அதற்கு என தனிச்சட்டம் கொண்டு வந்து அதனை நடத்த வழிவகை செய்தவர் கருணாநிதி.

    அதற்கு பின்னர் சிலர் உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றம் இதற்கென ஒரு குழு அமைத்தது. இந்த குழு இதுபற்றி விசாரிக்க தமிழகம் வந்தபோது அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

    அ.தி.மு.க. ஆட்சியில் தான் கருணாநிதி நடைமுறைப்படுத்திய எந்த சட்டத்தையும் பின்பற்றுவது கிடையாது. ஜல்லிக்கட்டுக்கும் அதே நடைமுறைதான். இதை பார்த்த அந்த குழு சாதகமற்ற அறிக்கையினை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டது.

    அதன்பின் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் 10.1.2015ல் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க மனு தாக்கல் செய்யப்படும் என்றார். ஆனால், எதையும் செய்யவில்லை. தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் முயற்சியில் ஈடுபடுவோம்.

    கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் கூறியதை நிறைவேற்றவில்லை. 2000 ஏக்கரில் ஐ.டி. பார்க், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாட்டில் மானாவரி பண்ணை, 19 ஏரிகள் தூர்வாரப்படும் என்றெல்லாம் சொன்னார். ஆனால் இவை எதையும் அவர் செய்யவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சிக்கு சரியான பாடம் புகட்ட நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையினை அப்படியே நகல் எடுத்து அ.தி.மு.க.வினர் வெளியிட்டுள்ளனர். தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் அவர்கள் வெளியிட வேறு ஒன்றும் கிடையாது. நீங்கள் செய்ததாக சொல்லும் அறிவிப்பை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு தான். அதுபோல் ஊழலைக் கட்டுப்படுத்த லோக் ஆயுக்தா கொண்டு வருவோம். 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிக்கை தந்த ஒரே கட்சி தி.மு.க.தான். விருத்தாச்சலம், சேலம் அ.தி.மு.க. கூட்டத்திற்கு வந்தவர்கள் இறந்துபோனார்கள். வெயிலில் மக்களை காக்க வைப்பவர் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க. மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்று நினைக்கும் கட்சி. இங்கு கூடி உள்ள கூட்டம் தானாக கூடியது. கூட்டப்பட்ட கூட்டம் இல்லை. நாட்டைக் காப்பாற்ற நம்மைக் காப்பாற்ற தமிழகத்தை காப்பாற்ற தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×