என் மலர்
செய்திகள்

தேவகோட்டையில் காண்டிராக்டர் வீட்டில் 97 பவுன் நகை கொள்ளை
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கைலாச நாதபுரம் பெரியகருப்பன் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் (வயது64), பந்தல் காண்டிராக்டர். தமிழ்நாடு பந்தல் தொழிலாளர் சங்க தலைவராகவும் உள்ளார்.
சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் பஞ்ச நாதனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்து பஞ்சநாதனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது யாரோ ‘மர்ம’ நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 5 பீரோக்களையும் உடைத்து 97 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
தேவகோட்டை டி.எஸ்.பி. கருப்பசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும், தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
பஞ்சநாதனின் வீட்டுக்கு செல்லும் வழியில் பழைய சருகனி ரோட்டில் உள்ள ஒரு நகரத்தார் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அங்கு நகைகள் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதேபோல் 5 தினங்களுக்கு முன்பு தேவகோட்டை டவுன் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் 29 பவுன் நகை திருடு போனது குறிப்பிடத்தக்கது.






